பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

பெங்களூரு:

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் வாலிபர்கள் தவறான முறையில் நடந்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது போன்று நடக்கத்தான் செய்யும் என்று அமைச்சர் பரமேஸ்வர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் எம்.ஜி. சாலை மற்றும் பிரிகேட் சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடினர். இத்றகாக இங்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

புத்தாண்டு பிரத்யேகமாக கொண்டாடப்பட்ட இரு சாலைகளிலும் பெண்களுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டனர். அதிகமான இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு தேடி பெண் போலீசாரிடம் ஓடினர்.
7, 8 பெண்கள் தங்களுக்கு நேர்ந்த சம்பவத்தினை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். பெண்கள் கண்ணீருடன் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளனர். வாலிபர்கள் ஆபாசமாகவும் பேசி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் இளைஞர்களை அடித்தும் விரட்டிஉள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம், அப்பகுதியில் 25-க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. அவை பரிசோதனை செய்யப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தோம். இது தொடர்பான தகவல்கள் எங்களிடம் வந்து உள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு செய்தி நிறுவனத்துக்கு ஜி பரமேஸ்வரா கூறுகையில். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். நாம் அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். துரதிஷ்டவசமாக 25 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதும் இவ்வாறு நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.