புனே மதரசாவில் பாலியல் கொடுமை : 36 சிறுவர்கள் மீட்பு

புனே

புனேவின் புறநகர் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் பாலியல் கொடுமை நடந்ததால் 36 சிறுவர்களை காவல்துறை மீட்டுள்ளது.

புனேவின் புறநகர் பகுதி கத்ரஜ்.   இங்கு மதரசா என்னும் இஸ்லாமிய பள்ளி அமைந்துள்ளது.   இந்த பள்ளியில் 36 மாணவர்கள் தஙகி படித்து வந்தனர்.    பீகாரை சேர்ந்த இந்த மாணவர்கள் 5 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்கள் ஆவார்கள்.   இந்த மதரசாவுக்கு ரஹீம் என்னும் 21 வயது இளைஞர் மௌலானாவாக இருக்கிறார்.

இந்நிலையில் இந்த மதரசாவில் தங்கி இருந்த மாணவர்களில் சுமார் 10 வயதுள்ள இரு மாணவர்கள் திடீரென காணாமல் போய் விட்டனர்.  அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட குழந்தைகள் நலக் குழு ஒன்று அவர்களை மீட்டது.     அந்த குழு இரு சிறுவர்களிடமும் விசாரணை செய்தது.   அப்போது அவர்கள் மதரசாவின் மௌலானாவான ரஹீம் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வதால் அங்கிருந்து ஓடி வந்ததாக தெரிவித்துளனர்.

இது குறித்து குழந்தைகள் நலக்குழு  காவல்துறையினரிடம் புகார் அளித்தது.   காவல்துறையினர் அந்த மதரசாவில் உள்ள 36 பீகார் சிறுவர்களை மீட்டனர்.    அத்துடன் மௌலானா ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.   பீகாரை சேர்ந்த இவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   ரஹீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.