செக்ஸ் டார்ச்சர் புகார்!: ஈ.வி.கே.எஸ். இனியன் சம்பத் தலைமறைவு!

மகள் உறவுமுறை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காங்கிரஸ் முன்னாள் பிரமுகரும் , அம்மா தி.மு.க. கட்சியின் தலைவருமான இனியன் சம்பத் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வருபவர் இனியன் சம்பத். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தம்பி. மேலும் இவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்தவர். தற்போது அம்மா தி.மு.க. என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார்.

 

 

இந்த நிலையில், சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வரும் மகள் முறையுள்ள 22 வயது இளம்பெண்ணுக்கு இனியன் சம்பத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. செல்போனிலும், வீட்டுக்கு வரும்போது நேரிலும் இனியன் சம்பத் பாலியல் சீண்டல் செய்ததாகவும், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். செல்போனில் இனியன் சம்பத் அந்த இளம்பெண்ணிடம் பேசிய ஆடியோக்களையும் அளித்தனர்.

இதையடுத்து இனியன் சம்பத் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிறகு இனியன் சம்பத்தை விசாரிக்க கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு காவலர்கள் சென்றனர். அங்கு அவர் இல்லை. மேலும் அவர் இருக்குமிடத்தை கூற அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து இனியன் சம்பத் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.