கொல்கத்தா:

கடந்த 2013ம் ஆண்டு ஆசியாவின் மிகப்பெரிய சிகப்பு விளக்கு பகுதியான கொல்கத்தா சோனாகாச்சி பாலியல் தொழிலாளர்கள் துர்கா பூஜையை கொண்டாட முயன்ற போது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தற்போது வரை அந்த கொண்டாட்டத்தை கைவிட வேண்டும் என அரசு நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு துர்கா பூஜை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த பூஜை தற்போது பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 30 முதல் 40 வயதுடைய 30 பாலியல் தொழிலாளர்கள் ஒரு பணிமனை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில் அவர்களுக்கு துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது அரசு உணவகங்களில் பணியாற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. கையில் கிளவுஸ், தலையில் தொப்பி அணிவித்து அவர்களுக்கு இப்பயிற்சியை கோவிந்த தாஸ் என்பவர் அளித்து வருகிறார். விழா காலத்தில் கொல்கத்தா முழுவதும் பரவலாக உள்ள உணவகங்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் பல வகை மீன்களை வெட்டி அனுப்புவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்கள் தினமும் 6 மணி நேரம் பணியாற்றுகின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை என மீன்களின் வகைகளை பொறுத்து சம்பளம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டலாம் என்று உத்தரவாதத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது பயிற்சி காலத்தில் அவர்களுக்கு தினமும் ரூ. 150 உதவித்தொகை மற்றும் பயணப் படியாக ரூ.50ம், மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இது குறித்து ஒரு பாலியல் தொழிலாளி கூறுகையில், ‘‘என்னை முதன் முதலில் இந்த பணி செய்ய அழைத்தார்கள். மீன் வெட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் மிக மகிழ்ச்சியாக உள்ளேன். நல்ல முறையில் மரியாதையுடன் கூடிய வருவாய் கிடைக்கிறது. தினமும் நான் எங்கு நான் பணிக்கு செல்ல வேண்டும் என்பது தெரியாமல் இருந்த நிலை மாறி தற்போது ரகசியமற்ற பணியை மேற்கொள்வது நிம்மதியாக இருக்கிறது.

பாலியல் தொழிலாளர்களுக்கும், தர்பார் மகிளா சமான்வாயாக குழுவுக்கும் (டிஎம்எஸ்சி) இடையே இடைத்தரகராக செயல்படும் கபிதா பிஸ்வாஸ் என்பவர் கூறுகையில், ‘‘சில பெண்கள் தற்போது வழங்கப்படும் உதவித் தொகை குறைவாக இருப்பதாக கருதுகிறார்கள். துர்கா பூஜை சமயத்தில் இது கனிசமாக உயரும். ஒரு சிலர் நாள் ஒன்றுக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை வருவாய் ஈட்டுகின்றனர்’’ என்றார்.

டிஎம்எஸ்சி தலைமை ஆலோசகர் ஸ்மரஜித் ஜனா கூறுகையில், ‘‘கட்டண உயர்வு தொடர்பாக மீன்வளத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தற்போது அதிகளவிலான ஊதியமே வழங்குகின்றனர். மேலும், இது பயிற்சி காலத்திற்கான உதவித் தொகை மட்டுமே. தொழிலாளர்கள் முழுமையாக பயிற்சி முடித்தவுடன் அதிகளவில் வருவாய் ஈட்டுவார்கள்’’ என்றார்.