அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்புவது நாகரிகமாகிறது: பாலியல் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து பதில்

சென்னை:

றியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்புவது தற்போது நாகரிகமாகி வருகிறது என்று தன்மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு கூறியவர்கள் குறித்து கவிஞர் வைரமுத்து பதில் தெரிவித்து உள்ளார்.

சமூக வலைதளமான டிவிட்டரில்,  #MeToo என்ற ஹேஸ்டேக் ( hashtag)  கடந்த சில  தினங்களாக பிரபலமாகி வருகிறது. இதில்,  பெண்கள் தங்கள் பணியிடங்களில் நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளி உலகத்திற்கு தெரிவித்து இந்த ஹேஸ் டேக்கை அடையாளப்படுத்தி வருகின்றனர்.

பல பெண்கள் தங்கள் பாதுகாப்பு கருதி பெயரிடாமல், தங்களுக்கு  நேர்ந்த அவலங்களை மட்டும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சில பெண்கள் மட்டும் தைரியமாக சிலரை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபலமான தமிழ்  கவிஞர் வைரமுத்து குறித்து பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

சந்தியா மேனன் என்பவர்,  தனக்கு வைரமுத்துவால்  நடந்த நிகழ்வுகளை தொகுத்து பதிவிட்டு வருகிறார். இதில், திரையுலகை சேர்ந்தவர்கள்,  சினிமா துறையினர், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும், தங்களது பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி வைரமுத்து குறித்து பதிவிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.அதைத்தொடர்ந்து, மேலும் பல பெண்களும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டது குறித்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமைதியான இருந்த கவிஞர் வைரமுத்து இன்று பதில் தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.

அதில்,  அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.

என்று பதிவிட்டுள்ளார்.