தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்: கலகலத்துபோகும் டெல்லி ஆம் ஆத்மி அரசு!

டில்லி:

டில்லியில் முறைகேடு தொடர்பாக மீண்டும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.

1aamathmi

டில்லி ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ., அமனதுல்லா மீது அவரது உறவுகார பெண் ஒருவர்,  தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி போலீசில் புகார் கொடுத்தார்.  அவரது புகாரின் பேரில் ஜாமீயா நகர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அமனதுல்லா டில்லி வக்பு வாரிய தலைவராகவும் உள்ளார். இவர் வக்பு வாரியத்தில் முக்கிய பதவிகளில் ஆட்களை நியமிப்பதில் ஊழல் செய்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அமனதுல்லா மீது வழக்கு பதிந்து முதல்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அமனதுல்லாகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர்,  ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

நான் டெல்லி மக்களுக்காக முழுமனதுடன் சேவை ஆற்றினேன். ஆனால் சிலருக்கு என்னுடைய நேர்மை பிடிக்கவில்லை. அவர்கள் என் மீதும் என்னுடைய குடும்பத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். அதனால் ஆம் ஆத்மி கட்சி எனக்கு அளித்துள்ள அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக விரும்புகிறேன். நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன். மேலும் வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஆம்ஆத்மி ஆட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலால் அந்த கட்சி கலகலத்துபோய் உள்ளது. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களால் கெஜ்ரிவாலுக்கு பிரச்சனை ஏற்பட்டு பெரும் தலைவலியாகிறது.

ஏற்கனவே, முதன்முறையாகச் சட்டப்படிப்பு படித்ததாகப் போலி சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சராக ஜிதேந்தர் தோமர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்து, ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான். இவர் உணவுத்துறையில் கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்து எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஒரு மணி நேரம் ஓடும் ஆடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த அமைச்சரை  நீக்கினார் கெஜ்ரிவால்.

அடுத்து, டெல்லி அமைச்சரவையில் சமூக நலம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார். இவர்  பாலியல் தொடர்பான பிரச்சினையில்,  இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது.  இதையடுத்து அவர் நீக்கப்பட்டார்.

தற்போது சட்டமன்ற உறுப்பினர் அமனதுல்லா கான் நீக்கப்பட்டிருக்கிறார்.

இதுபோன்ற பிரச்சினைகளால் டெல்லி ஆம்ஆத்மி அரசு பொதுமக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாமல் தள்ளாடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

கார்ட்டூன் கேலரி