பாலியல் கொலை வழக்கு: முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 10ஆண்டுகள் சிறை

சென்னை:

15 வயது கேரள சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2006 முதல் முதல் 2011ஆம் ஆண்டு வரை பெரம்பலூர்  தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார்.  இவரது வீட்டில், கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 15 வயது மகள் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியை எம்எல்ஏ ராஜ்குமார் உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுயநினைவின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  வழக்கின் விசாரணையின்போது, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிa 6 பேர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் திறக்கப்பட்ட , எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கில்  முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு தலா  10 ஆண்டு சிறை தண்டனையும் 42 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  மற்ற நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி இந்த அதிரடி தீர்ப்பை வழங்கினார்.