பாதி நூற்றாண்டுக்கு முன்பான பாலியல் புகார் : பாலிவுட்டில் பரபரப்பு

--

மும்பை

ந்தி நடிகர் ஜிதேந்திரா மீது 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு பெண் இமாசல பிரதேச காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

கேரள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை ஒட்டி பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தற்போது வெளியே தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.   அதற்காக ஆரம்பிக்கப்பட்டதில் ஒன்று #மீ டூ (#MeToo) என்னும் ஹேஷ்டேக் ஆகும்.   இந்த பதிவின் கீழ் நடிகைகள் உள்ளிட்ட பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

மூத்த பாலிவுட் கதாநாயகன் ஜிதேந்திரா மீது இந்த வரிசையில் ஒரு புகார் வந்துள்ளது.    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற கதாநாயகனாக விளங்கியவர் ஜிதேந்திரா.   அதற்குப் பின்பும் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தார்.   குறிப்பாக தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்படும் பல படங்களில் அவர் நடித்துள்ளார்.   நேற்றைய நாயகிகளான ஸ்ரீதேவி, ஜெயாப்ரதா போன்றோர் அவருடன் பல படங்களில் நடித்துள்ளனர்.

ஜிதேந்திராவின் உறவுப் பெண் ஒருவர் இந்த மீ டூ ஹேஷ்டாக் வரிசையில், “எனக்கு 18 வயதான போது என் தூரத்து உறவினரான ஜிதேந்திரா என்னை  எனது தந்தையின் அனுமதியுடன் ஒரு படத்தில் நடிக்க அழைத்தார்.   என்னை தன்னுடன் படப்பிடிப்புக்கு வெளியூர் அழைத்துச் சென்று அங்கு என்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.    இதை நான் இத்தனை நாட்கள் கழித்து சொல்வதற்கு காரணம் என் பெற்றோர்களே.

அவர்கள் எனக்கு இவ்வாறு நடந்ததை தாங்க மாட்டார்கள் என்பதால் வெளியில் சொல்லவில்லை.    மேலும் அவருக்கு அப்போது இருந்த பணபலம், ஆள் பலத்தின் முன்பு நான் இதை சொல்ல பயந்தேன்.  இப்போது என் பெற்றோர் உயிருடன் இல்லை.  மேலும் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை சொல்லுவதைக் காணும் போது எனக்கும் தைரியம் வந்துள்ளது.”  எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஜிதேந்திரா, “அந்தப் பெண் சொல்வது மிகவும் பொய்யான குற்றச்சாட்டு.  ஆதாரமில்லாத குற்றச்சாட்டு.   என் மீதுள்ள பொறாமையாலும் தொழிற் போட்டியாலும் இது போல மோசமான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்”  எனக் கூறி உள்ளார்.

ஆனால் அந்தப் பென் இந்த சம்பவம் இமசாலப் பிரதேசத்தில் நடந்ததாக தெரிவித்து, இமாசலப் பிரதேச காவல்துறையை அணுகி உள்ளார்.  அங்கு அவர் ஜிதேந்திரா மீது பாலியல் சீண்டல் குறித்து புகார் ஒன்றை சட்டபூர்வமாக அளித்துள்ளார்.

இந்நிகழ்வு பாலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.