Random image

பாலியல் புகார்: கேரள கம்யூ. எம்எல்ஏவை கைது செய்ய கோரி காங்கிரசார் போராட்டம்!

திருவனந்தபுரம்:

ந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், கம்யூனிஸ்டு எம்எல்ஏ மீது பாலியல்  புகார் கொடுத்துள் ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் சொர்னூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சசி. கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரான இவர்மீது,  அந்த கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதுகுறித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதைத்தொடர்ந்து,  கேரள மாநில கம்யூனிஸ்டு கட்சி  விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சீதாராம் யெச்சூரி உத்தரவிட்டுள்ளார்.  அதைத்தொடர்ந்து கட்சியின் மாநில கமிட்டியும் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து, தேசிய மகளிர் கமி‌ஷன் இதில் தலையிட்டு சசி எம்.எல்.ஏ. மீதான புகார் பற்றி விசாரணை நடத்தும்படி கேரள மாநில டி.ஜி.பி.யை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சசி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கேரளாவில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவரை கைது செய்ய வேண்டுமென்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

சசி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த  இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்  டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றனர். தடுப்பு வேலிகளை தாண்டி அவர்கள் முன்னேற முயன்றதால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.