பிஜே

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் பி.ஜே.வை கைது செய்ய வேண்டும்” என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் பி.ஜே. என்று அழைக்கப்படும் பி.ஜைனுலாபுதீன். இவர் ஒரு பெண்மணியுடன் ஆபாசமாக பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிஜே மீது பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இதில் அடங்குவர்.

பிஜே தரப்பினர், குறிப்பிட்ட அந்த ஆடியோ யாரோ ஒருவரால் மிமிக்ரி செய்யப்பட்டு  என்று குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்கள். மேலும், “குற்றம்சாட்டுபவர்கள் எங்களது சென்னை மண்ணடி அலுவலகத்துக்கு நேரடியாக சம்பந்தப்பட்ட பெண்ணுடன் வந்து குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்” என்று சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இதுவும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. “தனது குரல் இல்லை என்றால், தன்மீது அவதூறு செய்கிறார்கள் என்று சைபர் க்ரைம் காவல்துறையில் பீஜே புகார் செய்யலாமே” என்ரு தெரிவித்துவருகிறார்கள் பலர்.

தடா ரஹீம்

இந்த நிலையில், “பிஜேவை கைது செய்து குரல் சோதனை செய்ய வேண்டும், அவரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் விசாரிக்க வேண்டும்” என்று இந்திய தேசியலீக் கட்சியின் தமிழக தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் தடா ரஹீம் தெரிவித்ததாவது:

“அந்த ஆபாச ஆடியோவில் இருப்பது பிஜேவுடையதுதான். யாரும் சில நிமிடங்களுக்கு மேல் மிமிக்கிரி செய்ய முடியாது. அந்த ஆடியோவோ 28 நிமிடங்கள் ஓடுகிறது.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலி சாமியார்கள் ராம்ரஹீம, ஆசாரம் பாபு, பரமானந்த் பாபா.. போன்ற பலரது ஆபாச ஆடியோ பேச்சுத்தான் முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்தே அவர்கள் விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்கல் நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஆகவே பிஜேவையும் கைது செய்தால், அவரால் ஏமாற்றப்பட்டவேறு பல அப்பாவிப்பெண்கள் பற்றிய தகவல்கள் வெளியாகலாம். அப்படிச் செய்வதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

இதே இந்து சாமியார் ஒருவர் செய்திருந்தால் அதை எதிர்த்து இஸ்லாமிய  சமுதாயத்தைச் சேர்ந்த நாம் எல்லோரும் குரல் கொடுத்திருப்போம் அல்லவா.. அதுபோல இப்போதும் உண்மை வெளிப்பட நாம் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான முஸ்லிம் வேலை” என்று தடா ரஹீம் தெரிவித்தார்.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று மாலை புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.