பாலியல் புகார்: பத்திரிகையாளர்கள் இருவர் கைது!

சென்னையில் பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவரும் பேராசிரியை அளித்த பாலியல் புகாரின் பேரில் இரு  பத்திரிகையாளர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பேராசிரியை ஒருவர், தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 22), இவர்  சென்னை திருமங்கலம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“சமூக வலைதளமான முகநூல் மூலம் ஜனவரி 2017இல் ஜோ.ஸ்டாலின்  என்பவர் எனக்குப் பழக்கமானார். இதான் விகடன் பத்திரிகை குழுமத்தில் நிருபராகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். அதன்பின் நானும் ஸ்டாலினும் முகநூல் மூலமாக நட்பாகப் பழகி வந்தோம். மே 2018ல் ஸ்டாலின் என்னைப் சந்திப்பதற்காக அண்ணாநகரில் உள்ள காபி டேக்கு வரச் சொன்னார். நாங்கள் இருவரும் சந்தித்தபோது, அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை. ஆகவே, நான் அவருடன் வாட்ஸ் அப் மூலமாகப் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். ஆனால், ஸ்டாலின் என்னை மீண்டும் நேரில் சந்திக்கப் பலமுறை வற்புறுத்தி வந்தார்.

அவரது செயல்கள் எனக்குப் பிடிக்காததால், நான் ஏதாவது காரணத்தைச் சொல்லி அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தேன்.

இந்த நிலையில் ஏப்ரல் 2017இல் எனக்கு முகநூல் மூலமாக அ.ப.ராசா என்பவர் ப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருப்பதாகச் சொல்லி அறிமுகமானார். பிறகு இருவரும்  நண்பர்களாகப் பழகி வந்தோம். அந்த நம்பிக்கையில், நான் எனது வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவங்களை அவரிடம் கூறினேன். அவர் எனக்கு ஆறுதலாகப் பேசியது எனக்குப் பிடித்திருந்தது.

2018 மே மாதம் மெரினா கடற்கரையில் அ.ப.ராசா தனது காதலைத் தெரிவித்தார்.  அவர் திருமணமானவர் என்பதால் நான் மறுத்ததாகவும், அவர் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ வற்புறுத்தினார். இதன்பின், பலமுறை எனது வீட்டிற்கு வந்தார்.  அவருடன் தான் நட்புடன் பழகினேன்.

ஒருமுறை என்னிடம் அ.ப.ராசா பாலியல் ரீதியாக அத்துமீறினார். ஆனால் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் ஸ்டாலினும் ராசாவும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அவரிடம் விளக்கம் கேட்டேன். அப்போது, இருவரும் 10 ஆண்டு கால நண்பர்கள் தெரியவந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஸ்டாலின் அடிக்கடி என்னிடம் பழக முயற்சி செய்ததாகவும், அவரைக் கண்டிக்குமாறு ராசாவிடம் கூறினேன்.  அதன் தொடர்ச்சியாகத் திடீரென்று ஸ்டாலின் தனக்கு மிரட்டல் விடுக்கத் தொடங்கினார்.  “நீ இனிமே என்னைப் பற்றி யாருக்காவது சொன்னா, உன்னைப் பற்றி கேவலமாக உன் தந்தை மற்றும் உறவினர்களுக்குத் தெரிவிப்பேன் என்றும், உன் கல்லூரிக்கு வந்து அவமானப்படுத்துவேன் என்றும், உன்னோட குரல்வளையை அறுத்துவிடுவேன் என்றும் என்னை மிரட்டினார். மேலும், தான் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டர் என்றும் தனக்குப் பல பெரும்புள்ளிகள் தெரியும் என்றும், என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டினார். ஆகவே நான் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் ஜோ ஸ்டாலினும் ராசாவும்தான் காரணம்” என்று லோரா காவல் துறையினரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட திருமங்கலம் காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் ஸ்டாலின் மற்றும் அ.ப.ராசாவை உடனடியாகக் கைது செய்தனர். இவர்கள் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்கள் பிணையில் வெளிவர இயலாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) விகடன் குழுமத்திலிருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.