#MeToo-வில் சிக்கினார் பிரபல பாடகர் கார்த்திக்: தொடரும் சின்மயியின் பாய்ச்சல்

பிரபல பாடகர் கார்த்திக் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தமிழக திரையுலகில்  மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#Me Too என்ற ஹாஸ்டேக்கில் வெளியாகி வரும் பாலியல் புகார்கள் குறித்த பதிவுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.

இந்த ஹேஸ்டேக் மூலம், மத்திய அமைச்சர் அக்பர், பாலிவுட் நடிகர் நானே படேகர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பலர்மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த ஹேஸ்டேக்கில், பிரபல பாடகி சின்மயி, தமிழகத்தில் பிரபலமான கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கவிஞர் வைரமுத்து பட்டும் படாமல் விளக்கம் அளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண். பிரபல இலங்கை கிரிக்கெட் பிளேயர் மலிங்கா என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.   தற்போது இந்த வருசையில் பிரபல பாடகர் கார்த்திக் இணைந்துள்ளார்.

பாடகர் கார்த்திக் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில்,  ” சில வருடங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சியில் பாடகர் கார்த்திக்கை சந்தித்தேன். என்னிடம் சந்தித்து பேசிய அவர், என் உடலை அவர் வர்ணித்தார். மேலும் அவர் என்னை தொட விரும்புவதாக கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு  எந்த நிகழ்ச்சியில் அவரை சந்தித்தாலும், அவரை விட்டு விலகிச் சென்று விடுவேன். பெண் பாடகர்கள் அவரைப் பற்றி குறை கூறுவதை கேட்டிருக்கிறேன். அவர், திரையுலகில் பிரபலமான, செல்வாக்கு மிக்க பாடகர் என்பதால் பலர் அவர் மீது குறை கூறுவதற்கு தயக்கம் படுகின்றனர்”.

என கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி தமிழக திரையுலகினர் குறித்து, ‘ஸ்ரீலீக்ஸ்’ என பரபரப்பான தகவல்களை வெளியிட்டு தமிழக திரையுலகினரை கதிகலங்க வைத்த  நிலையில் தற்போது பாடகி  சின்மயியும் அதுபோல தினமும் ஒரு பரபரப்பான தகவல்களை வெளியிட்டு திரையுலகை சேர்ந்தவர்களிடையே பீதியை உருவாக்கி வருகிறார்…