விமானத்தில் இந்தி நடிகைக்கு பாலியல் தொல்லை!!

மும்பை:

அமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் என்ற இந்தி படத்தில் அவரது மகளாக ஜைரா வாசிம் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்தார். இதற்கான ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான தேசிய குழந்தைகள் விருதும் பெற்றார்.

இவர் நேற்று (9ம் தேதி) டில்லியில் இருந்து மும்பைக்கு ஏர் விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்தார். நடுவானில் சென்ற போது நள்ளிரவில் பின் இருக்கையில் இருந்த ஒருவர் கால்களால் ஜைராவிற்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் அழுதுகொண்டே இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் யார் என தெரியவில்லை எனவும் ஜைரா தெரிவித்துள்ளார்.

இதுவா சிறுமிகளை நீங்கள் கவனித்து கொள்ளும் விதம்?. எங்களை போன்ற சிறுமிகளுக்கு உதவ யார் இருக்கின்றனர்? என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதை தொடர்ந்து அந்த விமான நிறுவனம் ஜைராவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் பற்றிய விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.