மாணவி வன்கொடுமை: உ.பி.பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் கைது

கைது செய்யப்பட்ட பாஜ எம்எல்ஏ செங்கர்

லக்னோ:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள உ.பி. மாணவியை  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் இன்று அதிகாலை சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்.

உ.பி.  உன்னாவ் பகுதியில்  வசித்து வரும் 17 வயது மாணவி ஒருரை, அந்த தொகுதி  பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், எந்தவித  நடவடிக்கையும் எடுக்க காவல்துறை முன்வராததால், கடந்த 8ந்தேதி மாநில முதல்வர் யோகியை சந்திக்க முயன்று அவரது வீட்டு அருகே தற்கொலைக்கு முயன்றார்.

அதைத்தொடர்ந்து அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரது தந்தையையும் அழைத்து விசாரித்தனர். இதை அறிந்த செங்கார், தனது ஆட்களை அழைத்துச்சென்று காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. காவல்துறைக்கு  விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது

இதையடுத்து செங்காரின் சகோதரர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அலகாபாத் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பாஜக எம்எல்ஏ செங்கரை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.