நெட்டிசன்:

Subha Ganesan அவர்களின் முகநூல் பதிவு:

யார் கூடக் கலவி கொள்றது, யார் கூடக் குழந்தைப் பெத்துக்கிறது, யார் கூடக் குழந்தைப் பெத்துக்கிட்டா குழந்தை ஆரோக்கியமா, அறிவா, வீரியமா பொறக்கும்னு யோசிச்சு, அலசி ஆராய்ந்து, தன் துணையைத் தானே தேர்வு செய்வது தான் இந்தப் பாலியல் தேர்வு முறை. அதாவது sexual selection process.

இந்தத் தேர்வு முறைல இன்ட்ரெஸ்டிங்கான விஷயம் என்னனா,

மனித இனம் உட்பட, எல்லா உயிரினத்திலயும் ஆணினம் தன் ஆண்மையைக் கடைப்பரப்பும் அப்படி இல்லனா சக ஆணினத்தோடு சண்டையிட்டு, தாந்தான் அந்தக் கூட்டதுலேயே ஆண்மை மிகுந்ததுன்னு வெளிப்படுத்தும்.

பெண் இனம் அதில் வலிமையான, தன் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற ஆணைத் தேர்வு செய்து, தனக்குத் துணையாக்கிக் கொள்ளும்.

தவளைக்குக் குரல்,
மயிலுக்குத் தோகை (கண்ணீர் அல்ல 😉),
சிங்கத்துக்குப் பிடரிமயிர் போல

மனித ஆண் தன்னோட உடல்பலம், வீரம், பணம், அறிவு, திறமையின் மூலம் தன் ஆண்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பான்.

மனிதப் பெண் சல்லடையில் சலிப்பது போல் சலித்து, அதில் மிகச் சிறந்த ஆணையே தேர்வு செய்து கொள்வாள்.

“என்னது பெண் எங்களைத் தேர்வு செய்வதா? ஆண் தானே பெண்ணை விட உசத்தி”ன்னு யாரும் பொங்கிற வேண்டாம்.

மனித ஆண்களின் சட்டத்தில் வேணும்னா ஆணை உசத்தியா நினைச்சிக்கலாம். ஆனால் இயற்கையோட சட்டத்தில் பெண் தான் என்றுமே பிரதான பிரஜை, உசத்தி, முக்கியமான உயிரினம்.

இயற்கையான இனப்பெருக்கத்திற்கு ஆண், பெண் இருபாலினமும் முக்கியம் தான். ஆனால், அதில் அதிக முதலீடு போடுவது யார். பெண் தானே.

ஒரு நாளைக்கே கோடிக்கணக்கில் உருவாகும் விந்தணுவில் சிறிதளவும், பதினைந்து நிமிடமும் மட்டுமே ஆணின் முதலீடு.

ஆனால் பெண்ணிற்கோ மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உருவாகும் கருமுட்டை, அதில் ஒரு குழந்தையே வளரும் அளவிற்குச் சேமித்து வைக்கப்படும் சத்து, பத்து மாத வலி, அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்கு ஆகும் நேரம். இப்படி எக்கச்சக்க முதலீடுகள்.

எந்த ஒரு காரியத்திலும் யார் அதிக முதலீடு செய்கிறார்களோ அவர்களிடமே முடிவெடுக்கும் பொறுப்பும், அதிகாரமும் வந்து சேரும். அதனால் தான் இயற்கை பெண்ணின் கைகளில் பாலியல் தேர்வு என்னும் ஆயுதத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்த ஆயுதத்தைப் பெண்கள் உபயோகித்து வீரியமான மரபணுக்களைத் தேர்வு செய்யவில்லை யென்றால், அவள் போட்ட முதலீடு அனைத்தும் வீணாய் போவதுடன் மட்டுமல்லாமல் தரமான, ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்குப் பதில், நோஞ்சான் பிள்ளைகளே அதிகம் பிறந்து மனித இனமே அழிய வழிவகுத்தும் விடும்.

இப்பாலியல் தேர்வின் அளவீடுகள் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு காலத்திற்குமே மாறக் கூடியது. என்றும் நிலையானதல்ல.

ஆண் தன்னுடைய கலவித் துணையாக மட்டும் இருந்த காலத்தில், தனக்கு அதிக இன்பம் தரக்கூடியவனை மட்டுமே தேர்வு செய்து கொண்டிருந்த பெண், அவனே தன் வாழ்க்கைத் துணையாய் மாறிய பிறகு தனக்காகவும் தன் குழந்தைக்காகவும் தன் தேர்வு முறைகளை விசாலப்படுத்திக் கொண்டாள்.

அதிக உணவுக் கொணர்ந்து வரும் ஆண்
தங்களைப் பாதுகாக்கும் பலமான ஆண்
பணக்கார ஆண்
திறமையான ஆண்
புத்திசாலியான ஆண்
அழகான ஆண்
அதிகம் பேசும் ஆண்
தன்னை அதிகம் நேசிக்கும் ஆண்
தன் கருத்தோடு ஒன்றிப்போகும் ஆண்

இப்படி ஒவ்வொரு காலத்திலும் பெண்கள் தங்களின் தேர்வு முறைகளை மாற்றியமைத்து, தனக்கேற்ற கலவி மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதனால்,

ஆண்களும் பெண்களின் தேர்வு முறைக்கு ஏற்றபடி தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொண்டு, மனித இனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

காட்டுவாசியிலிருந்து கலியுகத்தையே ஆளும் அதிபதியாக மனித இனம் முன்னேறியதிற்கு, பெண்களின் இந்தப் பாலியல் தேர்வு முறையே மிக முக்கியக் காரணம்.

பெண் தேர்வு செய்பவள் என்பதனால், தேர்வு செய்யப்பட வேண்டிய ஆண் அவளை வீதிதோறும் துரத்தி துரத்தி காதல் அப்லிகேஷன் கொடுத்துக் கொண்டும், அவள் தன்னைத் தேர்வு செய்யாமல் வேறு ஒருவனைத் தேர்வு செய்துவிட்டால், தன் ‘ஆற்றாமையை மறைக்க’ அந்தப் பெண்ணையே திட்டித் தீர்த்தும், குடித்து ஒழிந்தும், சமயங்களில் பழியும் வாங்குகிறான்.

சினிமா மொழியில் பெண்களுக்கு ஜில், ஜங், ஜக் மாதிரி

அறிவியல் மொழியில் ஆண்களுக்கு ஆல்பா, பீட்டா, காமா.

எந்தப் பெண்ணாலும் தேர்வு செய்யப்படாத இந்த காமா ஆண்களால் உருவாக்கப்பட்டதே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் திருமணச் சட்டம்.

திருமணத்துக்குள் அடங்காமல் ஆல்பா ஆணையே தேடிப் போகும் பெண்ணை அடக்க உருவாக்கப்பட்டது தான் கற்பு நெறி.

ஏன் இந்தக் காலத்திலும், பெண்கள் தங்கள் காதல் துணையைத் தானே தேர்வு செய்துகொள்ள விடாமல் ஜாதி, குடும்பக் கௌரவம், கலாச்சாரம், கௌரவக் கொலையென்று அவளைப் பாசத்தால் அடக்கியும், பயமுறுத்தியும் தானே வைத்திருக்கிறது நம் சமூகம்.

பெண்கள் இந்தப் பாச சதி வலையைப் புரிந்து கொண்டு, இயற்கை அளித்த பாலியல் தேர்வு ஆயுதத்தைத் தைரியமாகவும் சாமர்த்தியமாகவும் உபயோகிக்க வேண்டும்.

அப்போது தான் மனித இனத்திற்குத் தரமான, ஆரோக்கியமான தலைமுறையும், பெண்களின் வாழ்க்கை அவர்கள் விரும்பியபடியும் அமையும்.

எல்லாம் சரி,

ஆண்களும் பார்க்கிற எல்லாப் பெண்கள் பின்னாடியும் போகாமல், குறிப்பிட்ட சில பெண்களை மட்டும் தானே பார்க்கிறார்கள். அப்போ ஆண்களும் பாலியல் தேர்வு செய்கிறார்கள் தானே.

ஆம். ஆண்கள் தம் திறமைகளை எந்தப் பெண்ணிடம் மிகுதியாய் வெளிப்படுத்தி, தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் இந்தப் பாலியல் தேர்வு முறையை உபயோகிக்கிறார்கள் தான். ஆனால் அது பெண்களின் தேர்வு முறை அளவிற்கு ‘மிக நுணுக்கமானதும் ஆழமானதும் கிடையாது’.

என்றுமே முதலீடுக்கேற்ற அக்கறை தான்.

பொதுவாக ஆண்களுக்கு அழகான சுறுசுறுப்பான, பளபளப்பு சருமத்துடன் இருக்கும் பெண்களையே அதிகம் பிடிக்கும். உடல் மெலிவானப் பெண்கள் மீது நிறைய நாட்டம் காட்டுவதில்லை.

இந்தப் பிடிப்பு கலவி சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. ஆரோக்யத்தோடும் சம்மந்தப்பட்டது தான்.

இப்போதைய சமூகச் சூழ்நிலைக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்னும் முறையே அனைத்து வகையிலும் சிறந்ததென்று ஆனதால், ஆண்களும் அவர்களது மரபணு ஆரோக்கியமான முறையில் அடுத்தத் தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டுமென நினைப்பதே ஆண்களின் இந்தப் பாலியல் தேர்வு முறை.

தற்போது சில ஆண்களுக்கு மட்டும் அறிவான, தைரியமான, மிடுக்கான பெண்களை அதிகம் பிடிக்க ஆரம்பித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இன்னும் சில வருடங்கள் கழித்து, அதிகமான பெண்கள் தங்கள் அடிமை விலங்கை உடைத்து, அவர்களது இயற்கையான ஆளுமைத் திறனை வெளிக்கொணர ஆண்களின் இத்தேர்வு முறையும் ஒரு வழிவகையாய் அமைய வாய்ப்புள்ளது. பார்ப்போம்.

ஆணோ பெண்ணோ அது யாராகினும் பாலியல் தேர்வின் மூலம் தன் துணையைத் தானே தேர்வு செய்வது மிக அவசியம். அது தான் இயற்கையும் கூட.

Sexual selection is playing a vital role in making our lives interesting and progressive. So everyone should love and select their partners by their own.

நம்ம யார் கூட வாழணும், யார் கூடக் குழந்தைப் பெத்துக்கணுங்கிறதக் கூட மத்தவங்களே முடிவெடுத்தா, நம்மளோட இந்த வாழ்க்கை தான் என்னத்துக்கு?