எஸ்.எப்.ஐ. மாணவர் கொலை: இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் மீது குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்:

கேரளாவில் எஸ்.எப்.ஐ. மாணவர் கொலையில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் அபிமன்யூ (வயது 20). இவர் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அந்த கல்லூரியில் விடுதி மாணவராக தங்கியிருந்த அபிமன்யூ இந்திய மாணவர் சங்க (எஸ். எப்..ஐ) நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில் இன்னொரு மாணவர் அமைப்பும் செயல்பட்டு வருகிறது.

அபிமன்யு

இந்த இரு மாணவர் அமைப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில் அந்த கல்லூரிக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் பணியில் இரு மாணவர் சங்க நிர்வாகிகளும்   ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் இடையே  மோதல் ஏற்பட்டது. அப்போது அபிமன்யுவை  எதிர் தரப்பினர் கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில் மாணவர் அபிமன்யூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை தடுக்கச் சென்ற அவரது நண்பரான மாணவர் அர்ஜூன் என்பவரும் கத்தியால் குத்தப்பட்டார்.  இதில் படுகாயம் அடைந்த அவர் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர் சங்க நிர்வாகி கொலை தொடர்பாக அந்த கல்லூரிக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் 3 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் வெளியில் இருந்து கல்லூரிக்குள் வந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே  மாணவர் அபிமன்யூ கொலைக்கு கண்டனம் தெரிவித்து கேரளா  முழுவதும் முழு அடைப்புக்கு   இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது

இந்த நிலையில் மாணவர் அபிமன்யுவை கொன்றது, இஸ்லாமிய அடிப்படைவாத பிரிவு என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.