‘துக்ளக்’கின் கழுதை அட்டைப்படம் மோடி, ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா? குருமூர்த்தியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை:

ற்போது வெளியாகி உள்ள துக்ளக் பத்திரிகையின் முகப்பு அட்டையில் போடப்பட்டுள்ள கேலிச்சித்திரமானது, பிரதமர் மோடி, தமிழக முன்னாள் முதல்வருக்கும் பொருந்துமா? என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி  வருகின்றனர்.

50ஆண்டு அரசியல் குறித்து கழுதைகள் படம் போட்டு குருமூர்த்தி விமர்சித்து உள்ள துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தியின் வக்கிரமான எண்ணத்துக்கு பல பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நாடக ஆசிரியர், நடிகர், வழக்கறிஞர், பத்திரிகையாளர்  என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த சோ ராமசாமி என்பவரால்,  1970ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் துக்ளக் பத்திரிகை, தமிழக மக்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சியினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.  அரசியல் சமூக நகைச்சுவை, நையாண்டி இதழான துக்ளக்கில் பிரசுரமாகும் கருத்துப் படமும், ‘அரசியல் நையாண்டி’களுக்கும் தனி வாசகர் வட்டமே உள்ளது. அதுபோல சோவின் கேள்வி பதில் மற்றும் அவரது கட்டுரை,  துக்ளக் இதழின் அரசியல் நிலைப்பாடுகள் தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பிரதிபலித்து வந்தது.

ஆனால், அவரது மறைவுக்கு, துக்ளக் பத்திரிகை சுவாமிநாதன் குருமூர்த்தி எனப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி வசம் சென்றது. அதைத்தொடர்ந்து துக்ளக் இதழில் வரும் கருத்துப்படங்கள், கேள்விப் பதில் போன்றவை சுவாராசியம் இல்லாத நிலையில் பெருமளவிலான வாசகர்களை இழந்து வருகிறது.

இந்த நிலையில், 22-01-2020 தேதியிட்டு  வெளியாகி உள்ள துக்ளக் இதழின் அட்டைப் படத்தில் வெளியாகி உள்ள கருத்துப்படம் கடும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.

அதில், இரண்டு கழுதைகள் பேசுவதுபோல படங்கள் வரையப்பட்டு, அத்துடன்  ஒரு கழுதை, ஐம்பது வருஷம் கழுதையா உழைச்சதைப் பாராட்டி, நம்மை அட்டையில் போட்டிருக்காக! என்று சொல்வது போலவும், 

அப்போது, மற்றொரு கழுதை, ரொம்ப பீத்திக்காதே!  நாம் மட்டுமா உழைச்சோம்? துக்ளக் வளர்ச்சிக்கு  எதத்தனை அரசியல்வாதிகள் உழைச்சாங்க! அவங்க அத்தனை பேரையும் போட  முடியாதேன்னு,  ஒரு அடையாளத்துக்கு நம்மை மட்டும் போட்டிருக்காக!  என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த அட்டைப்படம் கடுமையான  சர்ச்சைகைளை எழுப்பி உள்ளது.  தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் குருமூர்த்தியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குருமூர்த்திக்கு  கேள்வி எழுப்பியுள்ள தி இந்துவின் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதா கிருஷ்ணன்,  துக்ளக் அட்டைப்படத்தில் இரு கழுதைகளின் படங்களை வரைந்து கருத்து தெரிவித்துள்ள நீங்கள், குறிப்பிட்டுள்ள பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் உள்ளார்களா? என்பதை  தெளிவுபடுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

‘இது ஒருபோதும் சுவையற்றது, அரசியல்வாதிகள் மீதான அர்த்தமற்ற தாக்குதல் அல்ல என்றும், குருமூர்த்தி ஒருபோதும் ‘சோ’வாக  முடியாது என்று விமர்சித்துள்ள ஆர்.கே.ராதாகிருஷ்ணன், துக்ளக்கின்  ஒழுக்கம் தற்கொலை செய்து கொள்ளும் இடத்தில் இருப்பதாகவும் டிவிட் போட்டுள்ளார்.

குருமூர்த்தியின் துக்ளக் அட்டைப்பட விவகாரம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும்,  துக்ளக் ஆண்டு விழாக்களில் பங்கேற்கும் அரசியல்வாதிகளை சொல்றாரு குருமூர்த்தி என்று பலரும், 

இதுக்கு மேலேயும் யாராவது ஒரு அரசியல்வாதி துக்ளக்  நிகழ்ச்சிக்கு போனால் அதை விட அசிங்கம் வேறு என்ன இருக்க முடியும்? என்றும் ஏராளமானோர் விமர்சித்து உள்ளனர்.

அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து சோ எழுதிய கட்டுரைகள் ஒருபோதும் சுவை யற்றும், தரக்குறைவாகவும் இருந்தது கிடையாது, அதுபோல அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களும் அர்த்தமற்று இருக்காது… ஆனால் தற்போதைய ஆசிரியர்  குருமூர்த்தியின் செயல் கண்டனத்துக்குரியது என்றும், இது ஒருபோதும் சோவின் கருத்துடன் பொருந்த முடியாது என்பதை நிரூபித்து உள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, குருமூர்த்தி தான் முதன்மையான அரசியல் ஞானி போல பேசி வருகிறார், தான் பதவி ஏற்றப் பிறகு துக்ளக் விற்பனை  இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பொய் சொல்லி வருகிறார்… துரதிர்ஷ்டவசமாக, குருமூர்த்தியின் பேச்சை யாரும் நம்புவது இல்லை என்றும் கருத்து பதிவிடப்பட்டு உள்ளது.

துக்ளக் அட்டைப்படத்தையும்,  குருமூர்த்திக்கும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்…