கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.

மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.

நாட்டு மக்கள் அனைவருமே மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா கிருமித் தொற்று இந்தியாவில் பரவி வரும் இந்த சூழலில் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், பொது இடங்களுக்கு வரக்கூடாது மேலும் தவறான தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் ஷாரூக் கான் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 10 – 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள அரசாங்கமும், குடிமக்களும் சேர்ந்து வலிமையாகப் போராட வேண்டும். மேலும் இந்த சூழலில் பதட்டப்படாமல், தவறான தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். அரசாங்கம் அளித்துள்ள வழிமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.