தூக்கிலிடப்படும் முன் வாக்குமூலம்.. 45 ஆண்டுகளுக்குப்பின் சிக்கிய கொலையாளி..
ஷேக் முஜிபுர் ரகுமான்
பங்களாதேஷ் முன்னாள் அதிபர் முஜிபர் ரஹ்மானைக் கொன்ற மற்றொரு கொலையாளி, மே.வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் முஜிபர் ரஹ்மான், 1975 ஆம் ஆண்டு , அந்த நாட்டு ராணுவ அதிகாரிகள் சிலர் நடத்திய கலகத்தில் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் சில ஆண்டுகளுக்கு முன்பு தூக்கில் போடப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான ராணுவ கேப்டன் அப்துல் மஜீத், மே.வங்காள மாநிலத்தில் சுமார் 23 ஆண்டுகள் மறைந்திருந்தார்.
அண்மையில் பங்களாதேஷ் சென்ற அவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மஜீத், கடந்த 12 ஆம் தேதி தூக்கில் போடப்பட்டார்.
அவரை, இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தான், பிடித்து, பங்களாதேஷ் அரசிடம் ஒப்படைத்ததாக இப்போது தகவல் கிடைத்துள்ளது.
அவரும், மரண தண்டனை விதிக்கப்பட்ட இன்னொரு கொலையாளி மொசாலுதீன் என்பவனும், மே.வங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் மாறுவேடத்தில் இத்தனை ஆண்டுகள் மறைந்து வாழ்ந்துள்ளனர்.
மஜீத் ,தூக்கில் போடப்படுவதற்கு முன்பாக, மற்றொரு கொலையாளி மொசாலுதீன், பர்கானா மாவட்டத்தில் இருப்பதை வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்.
இதைக் குறித்து இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பர்கானா மாவட்டத்தில் பதுங்கி இருந்த மொசாலுதீனை, உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு அவர் ,பங்களாதேஷ், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
டாக்கா சிறையில், இன்னொரு தூக்குக் கயிறு தயாராகி வருகிறது,
– ஏழுமலை வெங்கடேசன்