ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளை பிப், 28-க்குள் மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி:

மக்களவைக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, சொந்த ஊரில் பணியாற்றும் அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் அதிகாரிகளை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பணி இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களவைக்கு 2019-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்,டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு,  சுற்றறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:
ஆந்திரா, ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு மக்களவையோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதர மாநிலங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால், தேர்தல் பணியில் தொடர்புடைய அதிகாரிகள் தங்கள் சொந்த ஊரில் பணியாற்ற முடியாது. அதேபோல் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்படவேண்டும்.

சிறப்பு தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல. இந்த உத்தரவு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பொருந்தும்.

ஐஜி, டிஐஜி,ஆயுதப்படை கமாண்டர்,எஸ்பி முதல் இன்ஸ்பெக்டர் வரை, தேர்தல் பாதுகாப்புக்கு யாரெல்லாம் பொறுப்பாளராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.