ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தூய்மை இந்தியா திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பாஜக அரசின் சுகாதார துறை அமைச்சராக இருப்பவர் காளிசரண் சாரப். இவர் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஒரு சுவரில் சிறுநீர் கழித்தார்.

 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘ இது பெரிய விஷயம் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த செயலுக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அர்ச்சனா சர்மா கூறுகையில், ‘‘தூய்மை இந்தியா திட்டத்திற்கு அரசு அதிக செலவிடும் அமைச்சரின் இத்தகைய செயல் வெட்கப்பட வேண்டியதாகும்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ரகு சர்மா கூறுகையில், ‘‘தூய்மை இந்தியா குறித்து அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், பொது இடத்தில் அமைச்சர் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதற்காக அரசு வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.