ஒருசில போட்டிகளை வைத்து எடைபோடாதீர் – பும்ராவுக்கு ஆதரவளிக்கும் ஷமி!

மும்பை: ஒருசில போட்டிகளை வைத்து பும்ராவின் பந்துவீச்சுத் திறனை எடைபோடுவது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார் மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

நியூசிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. காயத்திலிருந்து மீண்டுவந்த பும்ரா, விக்கெட் வீழ்த்த தடுமாறி வருகிறார்.

ரன்களை கட்டுப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும் அவரால், விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. எனவே, அவர்மீது பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் பும்ராவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ஷமியிடம் கேட்டபோது, “ஒரு வீரரின் திறனை ஒருசில போட்டிகளை வைத்து மதிப்பிடக்கூடாது. பும்ராவால் இந்திய அணி எத்தனைப் போட்டிகளில் வென்றுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

மாறாக, ஒருசில போட்டிகளை வைத்து செயல்திறனை மதிப்பிடுவது தவறு. ஒரு வீரரின் செயல்பாடுகளை வெளியிலிருந்து பார்ப்பது எளிது. ஆனால், அந்த வீரரின் நிலையிலிருந்து பார்த்தால்தான் உண்மை நிலை புரியும்” என்றுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-