ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் – இது முகமது ஷமியின் சாதனை!

கட்டாக்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற முகமது ஷமி, இந்த 2019ம் ஆண்டில், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷமிக்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தாலும், அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இவர், இந்தாண்டில் மொத்தம் 21 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை நியூசிலாந்தின் டிரன்ட் பவுல்ட் (38 விக்கெட்டுகள்) மற்றும் மூன்றாவது இடத்தை அதே அணியின் பெர்குசன் (35 விக்கெட்டுகள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.

முகமது ஷமியின் திறமையை முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “முகமது ஷமியின் பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷலை நினைவுபடுத்துகிறது.

அவரின் பந்துவீச்சைப் பற்றி நினைத்தால் நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும்கூட எழுந்துவிடுவேன். நமது ஷமியின் பந்துவீச்சு ஸ்டைலைப் பார்க்கையில், ஒரு சிறுத்தை வேட்டைக்குச் ச‍ெல்வதைப்போல் உள்ளது” என்றுள்ளார் கவாஸ்கர்.