ஷங்கர்

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணியில் 2.0 படப்பிடிப்பின் போது, செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்தார்.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 2.0 திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்தது.

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த தெருவில் முன்னறிவிப்பு இன்றி திடீரென படப்பிடிப்பு துவங்கப்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்தையும் படப்பிடிப்பு குழுவினர் தடை செய்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து விசாரித்த செய்தியாளர் ரகுநாதன், பரத் ஆகியோரை படப்பிடிப்பு குழுவினர் தாக்கினர். இது குறித்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார் அளித்தனர். படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த புரடக்சன் மேனேஜர் சுந்தரராஜன் அலெக்ஸ் உட்பட சிலர் தாக்கியதாக அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

செய்தியாளர் சந்திப்பில்..

இந்த நிலையில் சற்று முன், சென்னை பத்திரிகையாளர் மன்றம் வந்த 2.0 படத்தின் இயக்குநர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், “ஒரு வீட்டினுள் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. நான் அங்கிருந்தேன்.  அந்த நேரத்தில் இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது. இந்த சம்பவம் நடந்தது எனக்குத் தெரியாது என்றாலும், நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இனி இதுபோல  எப்போதும் நடக்காது” என்று ஷங்கர் தெரிவித்தார்.

பிறகு, தாங்கள்  காவல்துறையில் அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக செய்தியாளர்கள் இருவரும் தெரிவித்தனர்.