கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் வசந்தபாலன்.

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

இவர்கள் இணைந்து தயாரிக்கவுள்ள முதல் படத்தை வசந்தபாலனே இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதைநாயகனாகவும், துஷாரா விஜயன் நாயகியாகவும், சிங்கம்புலி, பரணி மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

ஜி வி பிரகாஷ் இத்திரைப்படத்தின் இசைக்காக வசந்தபாலனுடன் இணைகிறார். எட்வின் சாக்கே ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றுகிறார். எம் ரவிக்குமார் படத்தொகுப்பை கையாள்கிறார். நிர்வாக தயாரிப்பாளர்காக பிரபாகரும், லைன் புரொட்யூசராக நாகராஜ் ராக்கெப்பனும் இருப்பார்கள். தூரிகை கபிலன் இந்த படத்தின் மூலம் காஸ்ட்டியூம் டிசைனராக திரையுலகில் கால்பதிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் சாந்தா தனஞ்செயன் ஓய்வுபெற்ற தலைமையாசிரியையாக நடித்துள்ளார். “சின்ன வேடம். ஆனால், கிளைமாக்ஸை நோக்கி செல்கையில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்” என்று சாந்தா தனது வேடம் குறித்து கூறியுள்ளார்.