“சுஷாந்த் தற்கொலையும், டி.வி.க்களில் நடக்கும் விவாதமும்’’ –சரத்பவார் வேதனை

--

“சுஷாந்த் தற்கொலையும், டி.வி.க்களில் நடக்கும் விவாதமும்’’ –சரத்பவார் வேதனை

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார், முதல் –அமைச்சர் ,ராணுவ அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.

அரசியலில் தெளிவான பார்வை கொண்ட அவர் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்கமாக ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சீன விவகாரம் மற்றும் நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் கவனம் ஈர்ப்பதாக உள்ளது.

’’சீனாவுடனான விவகாரத்தை இந்தியா  ஜாக்கிரதையாக அணுக வேண்டும். துணைக் கண்டத்தில் இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகள் , சீன ஆதரவு நாடுகளாக உள்ளன.

பாகிஸ்தான் எப்போதுமே, சீனாவின் நட்பு தேசம். பங்களா தேஷும், இலங்கையும் இந்தியாவை விட இப்போது சீனாவுடன் நெருங்கி விட்டன. ’’ நேபாளம் உலகில் உள்ள ஒரே ஒரு இந்து ராஜ்யம்’’ என பா.ஜ.க.வும், சங் பரிவார் அமைப்புகளும் பெருமிதம் கொண்டன. இன்று?, சீனாவுக்கு புதிய  நட்பு நாடாகி விட்ட , நேபாளம், இந்தியாவுடன் பகைமை பாராட்டுகிறது’’ என்று நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி தெரிவித்துள்ள சரத்பவார், நடிகர் சுஷாந்த்  தற்கொலையில் ஊடகங்கள் காட்டும் அக்கறை குறித்து வேதனையுடன் குறிப்பிட்ட விஷயம் இது:

‘’இந்தி திரை உலகம் பற்றி எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. சுஷாந்த் தற்கொலையில் மும்பை போலீசார், நிச்சயம் உண்மைகளைக் கண்டு பிடிப்பார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.சுஷாந்த் மரணம் குறித்து ஊடகங்களில், குறிப்பாக பல்வேறு காட்சி ஊடகங்களில் மணிக் கணக்கில் விவாதம் நடைபெறுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. எல்லையைப் பாதுகாக்க கல்வானில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அந்த விவகாரம் குறித்து இவ்வளவு ஆழமாக விவாதம் நடந்த மாதிரி தெரியவில்லை’’ என்றார், சரத்பவார்.

– பா.பாரதி.