மும்பை:  சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக போராடும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு, என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக மமதா பானர்ஜி கடுமையான போராட்டத்தை முன் எடுத்துள்ளார்.என் உயிரே போனாலும் இந்த சட்டத்தை தமது மாநிலத்தில் அமல்படுத்த மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மமதாவின் இந்த போராட்டத்துக்கு என்சிபி தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மமதாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மத்திய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும், நமது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகவும் எந்தவொரு ஒருங்கிணைந்த திட்டத்துடனும் என்னை இணைப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.

2019ம் ஆண்டு டிச.23ம் தேதி நீங்கள் எழுதிய கடிதத்தை பார்த்தேன். சிஏஏர சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்து ஒத்த எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், கட்சிகளுடன் ஒற்றுமையுடன் நிற்பேன் என்ற உங்கள் அக்கறையையும், உறுதிமொழியையும் நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த சட்டம் நாட்டில் மத, சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறுபவர்களுக்கு மட்டுமே புதிய சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படுவது ஏன்? ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு இல்லையே என்றும் கேட்டுள்ளார்.