மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் எழுதிய கடிதம்: பிரதமரிடம் சரத் பவார் அதிருப்தி

மும்பை: மத வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து மகாராஷ்டிரா முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமர் மோடிக்கு, சரத்பவார் கடிதம் எழுதி உள்ளார்.

நாட்டிலேயே அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. ஆகையால், பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தும், மகாராஷ்டிராவில் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கொரோனாவின் 2வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு, கோவில் தரிசனம் போன்றவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது. கோவில் தரிசனத்திற்காக கோரிக்கைகள் எழுந்தும், முதல்வர் உத்தவ் தாக்கரே விதிகளை தளர்த்த வில்லை.

இதனையடுத்து தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தளர்வுகளை தள்ளிவைக்க ஏதேனும் கடவுளின் முன்னறிவிப்புக்காக காத்திருக்கிறீர்களா? அல்லது திடீரென்று மதச் சார்பற்றவர்களாக மாறிவிட்டீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந் நிலையில் இந்த கடிதத்துக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமர் மோடிக்கு என்சிபி தலைவர் சரத் பவார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த கடித விவரங்களை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சரத்பவார் கூறி இருப்பதாவது:

துரதிர்ஷ்டவசமாக ஆளுநர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் ஊடகங்கள் வாயிலாக நான் காண நேர்ந்தது. ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு எழுதப்பட்டதை போல அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. அரசியலமைப்பின் முன்னுரையில், மதச்சார்பற்ற என்ற சொல் அனைத்து மதங்களையும் சமன் செய்து பாதுகாக்கிறது.

எனவே அரசியலமைப்பின் அத்தகைய கொள்கைகளை ஆதரிக்க வேண்டும். ஆளுநரின் கடிதம், அதன் தொனி மற்றும் பயன்படுத்தப்பட்ட  மொழி  அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது. ஆளுநர் மற்றும் முதல்வரிடம் இதை பற்றி நான் ஒன்றும் கேட்கவில்லை. ஆகையால் மக்கள் மத்தியிலும், உங்களிடமும் எனக்கு ஏற்பட்ட வலியையும், அதிர்ச்சியையும் பகிர்ந்து கொள்ள இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று சரத்பவார் கூறி உள்ளார்.