சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏக்கள் எப்படி கிடைப்பார்கள் ?: சரத் பவார் கேள்வி

சிவசேனா கட்சியுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று சரத் பவார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பிருந்தே, பாஜகவுடன், சிவசேனா கூட்டணி அமைத்து இருந்தாலும் கூட, தற்போது திடீரென முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டு தர வேண்டும் என்று சிவசேனா போர்க்கொடி தூக்கி வருவதால் அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் வருகிறது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை பெறும் என்று அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வந்தது. சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஏற்கனவே ஒரு முறையும், இன்றும் சரத் பவாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதால், கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இச்சந்திப்புக்கு பிறகு சிவசேனாவுடன் கூட்டணி இல்லை என்று சரத் பவார் அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், “சஞ்சய் ராவத் உடனான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. மரியாதை நிமித்தமானது மட்டுமே. அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை இணைந்து விரைவிலேயே அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசையில் அமரும்.

பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தான் மக்களின் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் அதை ஏற்று நடக்க வேண்டும். தேசியவாத காங்கிரசை பொறுத்தளவில் அரசியல் சாசன இக்கட்டு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி என்ற பேச்சு எங்கே இருந்து வந்தது ? சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏக்கள் கிடைப்பார்கள் என்று எப்படி நம்புகிறார்கள் ? சிவசேனாவும், பாஜகவும் கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் கூட்டாளிகளாக இருந்து வருகிறார்கள். மீண்டும் அவர்கள் கூட்டணியாக ஆட்சி அமைக்கவும் வாய்ப்புள்ளது. பொறுமையாக நடப்பதை பார்ப்போம்” என்று தெரிவித்தார்.