Random image

டீசல் விலை உயர்வு : ஷேர் ஆட்டோ கட்டணம் கிடு கிடு உயர்வு

சென்னை

டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்துள்ளது.

மாநகரப் பேருந்துகளுக்கு சமமாக சென்னை நகரில் ஷேர் ஆட்டோக்களும் இயங்கி வருகிறது.   சிறிய தூரப் பயணத்துக்கு உடனடியாக மக்களுக்கு கிடைப்பது ஷேர் ஆட்டோ என்பதால் பலரும் பயணம் செய்து வருகின்றனர்.   முக்கியமாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இன்றியமையாததாகி விட்டது.

தற்போது சென்னையில் சுமார் 10000 க்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.    தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை காரணம் காட்டி சில இடங்களில் ஷேர் ஆட்டோ கட்டணத்தை ரூ. 5 வரை உயர்த்தி உள்ளனர்.

ஷேர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், “தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு எங்கள் வாழ்வாதாரத்தி பெரிதும் பாதித்துள்ளது.   ஏற்கனவே நாங்கள்  போதிய வருமானம் இன்றி வாடி வருகிறோம்.   பெரும்பாலான ஓட்டுனர்கள் வாடகைக்கு ஷேர் ஆட்டோக்களை எடுத்து ஓட்டி வருகிறோம்.

முன்பு எங்களுக்கு வாடகை மற்றும் எரிபொருள் செலவு போக ரூ.1000 வரை கிடைத்து வந்தது.   தற்போது ரூ.500 கூட கிடைப்பதில்லை.  இதனால் தற்போது ரூ.5 உயர்த்தி உள்ளோம்.   மேலும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்தால் மேலும் கட்டணம் உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வால் ஷேர் ஆட்டோக்கள் மட்டுமின்றி ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிக்களுக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது.    இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் விலை உயர்வை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் கேட்கின்றனர்.  ஒரு சில ஓட்டுநர்கள் பயணம் தொடங்கும் முன்பே கூடுதல் கட்டணத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பயணிகளை மட்டுமே ஏற்றி செல்கின்றனர்.