தெலுங்கானாவில் ஷர்மிளாவின் புதிய கட்சி – நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உடன்பிறந்த சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில், வரும் ஜூலை 8ம் தேதி புதிய கட்சியை துவக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த நாள், மறைந்த அவரின் தந்தையும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷர்மிளாவின் புதிய கட்சி திட்டத்தின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், இதில் ஒன்று மட்டும் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஷர்மிளாவின் இந்தப் புதிய முயற்சிக்கு, ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவு இருப்பது எந்தளவு உண்மையோ, அதேயளவு, தற்போதைய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின்(கேசிஆர்) ஆசியும் உண்டு என்பதும் உண்மை.

தெலுங்கானா தனிமாநிலம் உருவாக முக்கிய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தில் தேய்ந்து வருகிறது. அக்கட்சி நம்பியிருந்த விஜயசாந்தியும் காங்கிரசை கைவிட்டுவிட்டார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் அம்மாநிலத்தில் வளர்வதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. அதேசமயம், கேசிஆரின் பரம அரசியல் வைரியாவார் சந்திரபாபு நாயுடு.

மேலும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கானாவில் வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும், இரண்டு அரசியல் நண்பர்கள் தேவையில்லாமல் மோதிக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஜெகனைப் பொறுத்தவரை, அவரின் மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு, வலுவான அரசியல் எதிரி. அவரை முன்னிலைப்படுத்தி, பாஜகவை, ஜெகன்மோகன் கார்னர் செய்துவிடலாம். எனவே, ஆந்திராவில் ஜெகனுக்கு பிரச்சினையில்லை. ஆனால், தற்போது, தெலுங்கானாவில்தான், முதல்வர் கேசிஆருக்கு பிரச்சினை! (தெலுங்கு தேசம் & ஒய்.எஸ்.ஆர் கட்சிகள், தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது).

ஆனால், அதே தெலுங்கானா உருவாக்கத்தை, ஒருபக்கம் எதிர்த்தும், இன்னொரு பக்கம் ஆதரித்தும் வந்த பாஜக, தற்போது, அம்மாநிலத்தில் பெரியளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதுதான், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சியின் தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திரசேகர ராவை கலங்கடித்து வருகிறது.

பாஜகவின் வளர்ச்சியால், கடந்த மக்களவைத் தேர்தலில், தனது மகள் கவிதாவின் தோல்வியைக்கூட அவரால் தடுக்க முடியவில்லை. சில மாதங்கள் முன்னர் நடைபெற்ற முக்கிய சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலிலும், பாஜகவிடம் தோற்றது டிஆர்எஸ் கட்சி. இதனால், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள், பாஜகவின் வேகத்திற்கு கடிவாளம் போட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார் கேசிஆர். ஏனெனில், ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலிலும், பாஜக, ஓவைசி துணையுடன், டிஆர்எஸ் கட்சியை பெரியளவில் மிரட்டிவிட்டது.

எனவே, தேசிய கட்சியான பாஜகவின் வளர்ச்சிய‍ைத் தடுக்க வேண்டுமெனில், ஒரு புதிய பிராந்தியக் கட்சி, அம்மாநிலத்திற்கு தேவை. மாநிலத்தின் அரசியல் போட்டியை, டிஆர்எஸ் vs புதிய மாநில கட்சி என்பதாக மாற்ற வேண்டும். அப்போதுதான், பாஜகவுக்கு செல்லும் வாக்குகள் மடைமாறும்!

புதிய பிராந்தியக் கட்சி ஒன்று உருவாகி, (தெலுங்கானா உருவாக்கத்திற்கு எதிராக இருந்திராத), அது மாநில உரிமைகள் குறித்து வீச்சுடன் பேசும்போது, பாஜகவின்பால் கவரப்படும் வாக்காளர்களின் கவனம் சிதறும். அதன்மூலம், தனது அரசியல் வெற்றியை பெரிய சேதாரம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது கேசிஆரின் திட்டமாக இருக்கலாம். இதனை அறிந்த அவரின் நண்பர் ஜெகன்மோகன் ரெட்டியும், இத்திட்டத்திற்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கலாம்.

விளைவு, இதுவரை செய்தியாக இருந்த இந்த நிகழ்வு, தற்போது நேரடி அறிவிப்பு வரை வந்துவிட்டது. ஆந்திராவில், ஒய்எஸ்ஆர் கட்சியின் நட்சத்திர முகமாக இருக்கும் ஷர்மிளா, தெலுங்கானாவின் முதல்வராக அமர்ந்தாக வேண்டிய கட்டாயமெல்லாம் இப்போதைக்கு இல்லைதான். (ஒருவேளை, எதிர்காலத்தில் சூழல் மாறலாம்). எனவே, தற்போதைய திட்டத்திற்கு அவர் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறார் என்ற கருத முடிகிறது. சாதிய ஓட்டுகளும், ஷர்மிளாவின் மூலமாக நன்றாக பிளவுபடும்.

அடுத்த 2023ம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலுக்குள், ஷர்மிளாவின் கட்சி நன்கு பிரபலமடைய வாய்ப்புள்ளது. இதன்மூலம், பாஜகவின் வளர்ச்சிக்கு கடிவாளம் இடப்பட்டு, அதிகாரப் போட்டியானது, இரண்டு பிராந்தியக் கட்சிகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வுடன் பயணப்படும் என்று கணிக்கப்படுகிறது.