திருவனந்தபுரம்

ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ கல்வியக இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவக் கல்வியகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்கு டாக்டர் ஆஷா கிஷோர் என்பவர் இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.   இவருக்குப் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி அதை நீட்டிப்பதில் கடும் சர்ச்சை நிலவி வருகிறது.   இதையொட்டி டாக்டர் ஆஷா கிஷோர் ஏற்கனவே தனது பதவி நீட்டிப்புக்கு உத்தரவிடுமாறு தீர்ப்பாயத்தை அணுகினார்.

தீர்ப்பாயம் இவருக்குச் சாதகமாக அளித்த தீர்ப்பை எதிர்த்து ஒரு சில உறுப்பினர்கள் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுள்ளனர்.    இவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதற்குத் தடை விதித்ததில் இந்த கல்வியகத்தில் உள்ள பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கப்பின்னணி உறுப்பினர்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாஜக மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில், “திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ கல்வி மைய இயக்குநர் விவகாரத்தில் மையத்தைச் சேராத பல வெளி சக்திகள் தலையிட்டுள்ளன.  இதைப்போல் இஸ்ரோவிம் முன்னாள் விஞ்ஞானி விவகாரத்திலும் வெளி ஆட்கள் தலையிட்டனர்: என பதிந்துள்ளார்

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தனது டிவிட்டரில், “நான் சுப்ரமணியன் சாமியின் கருத்துடன் ஒத்துப் போவேன நினைக்கவே இல்லை.   ஆனால் விதிப்படி தனது பதவியை நீட்டிக்க வேண்டும் கடந்த 4 மாதங்களாகத் தனியாகப் போராடி வரும்  டாக்டர் ஆஷா கிஷோருக்கு ஆதரவாக என்னைப் போல் அவரும் குரல் கொடுத்துள்ளார்.  ஆஷா கிஷோர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களால் இந்திய அரசின் உதவியுடன் தண்டிக்கப்பட்டுள்ளார்” என பதிந்துள்ளார்.