ஏழுமலை வெங்கடேசன்:

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பகிரங்கமாக வெளியிடக்கூடாது என்று நெறிமுறைகள் இருந்ததால், பல்வேறு சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முடிவுகட்டும் வகையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதெல்லாம் பொதுமக்களின் சந்தேக பக்கங்களில் முக்கியத்துவம் பெறாதவை..அவர்களின் சந்தேகமெல்லாம் ஏன் ஜெயலலிதாவை பார்க்க யாரையுமே விடவில்லை என்பதுதான்.
சர்ச்சைகளின்றி கடந்திருக்கவேண்டிய விஷயம் மிகப்பெரிய மர்மமாக மாறிப்போனதுதான் ஆரம்பப்புள்ளியின் மையம்.

உடன் இருந்த சசிகலாதான் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கொண்டு சென்றவர். அன்றிலிருந்து ஜெயலலிதா மரணமடையும்வரை அப்பல்லோ வாசலே கதியென்று கண்ணீரோடு தவித்த தொண்டர்கள் முன்பு எப்போதாவது தோன்றி உயிர்தோழியின் நிலவரம் பற்றி பேசியிருக்கிறாரா? இல்லவேயில்லை…கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றுக்கொண்டு உரைஆற்றியபோதுதான் அவரின் குரலையே கேட்கமுடிந்தது.

இப்போது மருத்துவமனையில் காவிரி பிரச்சினை பற்றியெல்லாம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று சொல்கிறார்கள். அப்படி ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிகள் யாருமே அப்போது உற்சாகமாக இது பற்றி வெளியே சொல்லியிருக்கலாம். ஏன் வாயை திறக்கவில்லை. சிலருடன் ஆலோசனை நடத்தும் அளவுக்கு உடல்நிலை முன்னேறியிருந்தால் அந்த நிலையிலும் ஜெயலலிதா தன் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று சொல்லியிருப்பாரா?

மத்திய அமைச்சர்கள், மோடிக்கு அடுத்து செல்வாக்கு பெற்ற அமித்ஷா, காங்கிரசின் ராகுல்காந்தி போன்றோர் வந்தபோதுகூட அவர்களும் நேரில் பார்த்ததாக சொல்லவில்லையே..அவ்வளவு ஏன் முதலமைச்சர் சுயநினைவோடு இருக்கிறாரா இல்லையா என்பதை நேரில் பார்த்து உறுதிசெய்து அரசியல் சாசன கடமையை செய்யவேண்டிய ஆளுநர்கூட இருமுறை அப்பல்லோவுக்கு சென்றும் தாம் நேரில் பார்த்ததாக சொல்லவில்லை..

ராஜ்பவன் அறிக்கைகளிலும் அப்படி எங்குமே இல்லை
பார்த்தவர்களும் சொல்லவில்லை.. பார்த்தாக சொன்னவர்கள் எங்களிடம் சொன்னார்கள் என்றும், யாரும் சொல்லவில்லை.. ஒரு முதலமைச்சர் விஷயத்தல் இந்திய வரலாற்றில் இதுமாதிரி நடந்ததேயில்லை.. குறைந்தபட்சம் அரசு தரப்பில்கூட அதிகாரபூர்வமாய் தினசரி தகவல்கள் இல்லை.

அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களில், அவர் மீது அளவுகடந்த அக்கறையும் பாசமும் கொண்ட பிரதமர் மோடி வந்து பார்த்து நலம் விசாரிக்கும் அளவுக்கு, ஓரிரு நாட்கள்கூடவா நல்ல நிலைமை இருந்திருக்காது என்பது பொதுமக்களின் கேள்வி. மோடி வந்து பார்க்கும்போதாவது ஒரு புகைப்படம் வெளிவராதா என்று ஏங்கியவர்கள் மக்கள்..

ஏன் இப்படி மர்மமாகவே இருக்கிறது என்று மேலும்மேலும் சந்தேகம் வாட்டியெடுத்த நிலையில்தான் சசிகலாவின் பாய்ச்சல் படுவேகமாக இருந்தது. ஜெயலலிதா மாதிரியே உடை, கொண்டை, நெற்றித்திலகம், காலில் ஷாக்ஸ் என உருமாறி மின்னல் வேகத்தில் பொதுச்செயலாளரானது, அடுத்து ஓபிஎஸ்ஸை கீழே இறக்கி முதலமைச்சர் பதவியை ஏற்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் மன்றாடியவிதம் போன்றவற்றை கோர்த்து பார்த்தால் சசிகலா என்கிற பிம்பம் டேஞ்சரானது என்றே அடித்தட்டு மக்கள் மத்தியில் ஆழமாக வேறுன்றிப்போனது..

இனி எய்ம்ஸ் அறிக்கையென்ன, உண்மையான புகைப்படங்கள். வீடியோக்களை வெளிட்டாலும் அவற்றை மக்கள் எந்த அளவுக்கு நம்புவார்கள் என்பது கேள்விக்குறியே.. இறந்தவுடனேயாவது வெளியிட்டிருக்கலாமே..ஏன் விடவில்லை என்ற கேள்விகள்தான் வரும்.
அந்தந்த காலகட்டத்தில் பொதுமக்கள் சந்தேகம் களையும் வகையில் நம்புகிறமாதிரி உரியவர்கள் விளக்கம் தந்திருந்தாலே பிரச்சினைகள் முளைத்திருக்காது..

எல்லாவற்றையும்விட, தற்போதும் பலர் சொல்கிற விஷயங்கள் ஒன்றோடோன்று பொருந்தாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பதுதான் அப்பல்லோ விவகாரத்தில் முடிவுக்கு வராத அத்தியாயம்..
இப்போதுவரை இந்த விஷயத்தில் நஷ்டம் சசிகலா தரப்புக்கே…