ஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் சாஸ்த்ரா பல்கலை! வேடிக்கைப் பார்க்கும் தஞ்சை கலெக்டர்!

“உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகம் கெடு விதித்தும்…. எதையும் கண்டுகொள்ளாமல் ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக் கழகம். நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரோ எதுவும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்துகொண்டு  வழிய நிற்கிறார்” என்கிறார்கள் தஞ்சை மக்கள்.

தஞ்சை மாவட்டத்தில் திருமலை சமுத்திரம் பகுதியில் செயல்படுகிறது சாஸ்த்ரா பல்கலைக் கழகம். திறந்த வெளி சிறைச்சாலைஅமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கடந்த 22 வருடங்களுக்கும் கட்டிடங்கள் கட்டி செயல்பட்டு வருகிறது.

அதாவது, 58.17 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து அதில் 28 கட்டிடங்களையும் எழுப்பியுள்ளது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்.

ஆக்கிரமிப்பு சாஸ்த்ரா பல்கலை

இந்த நிலையில் மாநில அரசு அந்த நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று சாஸ்த்ரா பல்கலைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவர் அமர்வு கடந்த செப்டம்பரில் இவ்விவகாரத்தில் இருவேறு தீர்ப்புகளை வழங்கியது. நீதிபதி நூட்டி ராம் மோகன் ராவ் அந்த நிலத்தின் சந்தை மதிப்பான ரூ.10 கோடியை பெற்றுக் கொண்டு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதியான எஸ்.எம். சுப்பிரமணியம், ஆக்கிரமிப்பாளருக்கு நிலத்தைத் தருவது என்பது தவறான முன் உதாரணத்தை உருவாக்கிவிடும் என்று கூறி அந்த நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

சாஸ்த்ரா துணைவேந்தர் சேதுராமன்

மேலும், 4 வாரத்திற்குள் அந்த நிலத்தை அரசு மீட்க வேண்டும் என்றும் அக்காலகட்டத்தில் அந்த நிலத்துக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இருவர் அமர்வின் வேறுபட்ட தீர்ப்புகளின் காரணமாக, வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டார் அப்போதைய தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி.

ஆக்கிரமித்த கட்டிடங்களுக்காக “நயா பைசா கூட தரவில்லை” என்று கூறும் உச்சநீதிமன்ற தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்ற  மதுரை கிளையன் அமர்வு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியனின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

அதாவது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மேலும்  அந்த நிலத்தில் இருந்து கடந்த அக்டோபர் 3-ம் தேதிக்குள் சாஸ்த்ரா பல்கலை, வெளியேற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும், “ஆமாமாம்… 3ம் தேதி ஆக்கிரமிப்புகளைவிட்டு வெளியேறவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

சாஸ்த்ராவில் சாகா

ஆனால் 3ம் தேதி கடந்தும்  சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை திருப்பி ஒப்படைக்கவே இல்லை.

இது குறித்து அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தோம்.

“பல்கலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மூன்று நாட்கள் கெடுவை நீடித்துள்ளோம்.  வரும் 06.10.218 அன்று பல்கலை நிர்வாகம் ஆக்கிரமிப்புகளைவிட்டு வெளியேறிவிடும்ட என்று பதில் வந்தது.

ஆனால் ஆறாம் தேதி கடந்தும், சாஸ்த்ரா பல்கலை இன்னமும்  ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஆகவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை தொடர்புகொண்டு அலைபேசினோம்.

சாஸ்த்ராவில் சாகா பயிற்சி

அவர், “நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்.. பிறகு பேசுங்கள்” என்றார்.  “எப்போது பேசலாம்.. உங்களுக்கு சிரமமில்லாத நேரத்தைக் கூறுங்கள்” என்றோம். சற்று யோசித்தவர், “நேர்ல வாங்க.. பேசலாம்..” என்றார்.

“நேரம் சொல்லுங்கள்.. அலை பேசுகிறோம்” என்று நாம் மீண்டும் கூற, “நேரல் வாங்க..” என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.

பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டபோதும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நமது அழைப்பை ஏற்கவே இல்லை.

இந்த நிலையில் தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கரிகாலன் இன்னொரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை வீசுகிறார். இவர், செயலார்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்.

தஞ்சை பகுதிகளில் நடக்கும் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர்.

கரிகால் சோழன்

அவர் நம்மிடம், “ ஒரு நயா பைசா கூட வாடகை செலுத்தமால் கடந்த 30, ஆண்டுகளாக சாஸ்த்திரா பல்களைக் கழகம் ஆக்கிரமிப்பில் ஈடுட்டுள்ளது, சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று மட்டுமல்ல… அந்த ஆக்கிரமிப்புக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அது குறித்தும் இதுவரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துதது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். ஆனால் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் பானுமதி, இந்திரா பானர்ஜீ, அமர்வு வழக்கை விசாரித்தது . தள்ளுபடி செய்தது உத்தரவிட்டனர்” என்றார் கரிகாலன்.

மக்களைப் பொறுத்தவரை சாஸ்த்ரா பல்கலையை, “ஆர்.எஸ்.எஸ். பல்கலை” என்கிறார்கள்.

“அந்த பல்கலை வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்படுவது உண்டு. இதை எதிர்த்து ம.க.இ.க. அமைப்பு  பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். தொடர்பால் மத்திய பாஜக அரசில் நெருங்கிய தொடர்பு சாஸ்த்ரா பல்கலைக்கு உண்டு. ஆகவே நீதிமன்றம் தமிழக அரசு இரண்டின் உத்தரவையும் சாஸ்த்ரா மதிக்கவில்லை” என்கிறார்கள்.

அண்ணாதுரை

மீண்டும் மீண்டும் முயற்சித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை தொடர்புகொள்ள முடியாத நிலையில், “நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட ஆட்சியரான நீங்கள் கெடு விதித்தும் இன்னமும் சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று மக்களும் சமூக ஆர்வலர்கலும் ஆதங்கப்படுகிறார்கள்.

தவிர, ஆக்கிரமிப்புக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த தங்கள் நடவடிக்கையையும் அறிந்து செய்தி வெளியிட ஆர்வமாக இருக்கிறோம்” என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வாட்ஸ்அப் எண்ணுக்கு செய்தி அனுப்பியிருக்கிறோம். அவர் பதில் அளித்தால் பிரசுரிக்கிறோம்.

“அரண்மனை கோழியின் முட்டை, அம்மிக்கல்லையே உடைக்கும்” என்று ஒரு பழமொழி உண்டு. அதை, “ஆர்.எஸ்.எஸ். தொடர்பு அரசு நீதிமன்ற உத்தரவுகளையே மதிக்காது” என்று மாற்றிச் சொல்லலாம் போல.