கர்நாடகா பாஜக வுக்கு கண்டனம் தெரிவிக்கும் சத்ருகன் சின்ஹா

பாட்னா

ர்நாடகாவில் அரசு அமைக்க பாஜக அரசு முயன்றதற்கு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.   ஆயினும் ஆளுநர் அந்தக் கட்சியை அரசு அமைக்க அழைக்கவே எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார்.   அதன் பின் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவே  நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்போம் என்பதை அறிந்த எடியூரப்பா தானாகவே ராஜினாமா செய்தார்.

இது குறித்து முன்னாள் பாலிவுட் நடிகரும் பாஜகவின் பாரளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் அரசு அமைக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் கட்சிக்கு அசிங்கத்தையும் அரசியலில் மதிப்பிழப்பையும் அளித்துள்ளது.   சமீப காலமாகவே பாஜக இவ்வாறு அசிங்கப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

காங்கிரஸ் மற்றும் மஜத தற்போது ஜனநாயகத்தை வீழ்ச்சியில் இருந்து காத்துள்ளதாக தங்களைக் காட்டிக் கொண்டு பாஜகவை தனிமைப் படுத்து விட்டன.   சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகிய இருவருமே ஜனநாயகத்தின் எதிரிகளின்  கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளனர்.

பாஜகவின் இந்த ஆட்சி அமைக்கும் முடிவுக்கு பிரதமரும் ஒப்புதல் அளித்துள்ளார்.   பிரதமரை இந்த விவகாரத்தில் தவறாக வழி நடத்தியவர்களை உடனடியாக கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.    குறிப்பாக கர்நாடகாவில் அரசு அமைத்தது பாஜகவின் வெற்றி என பிரதமர் முன்பு முழங்கியவர்களை உடனடியாக விரட்டி அடிக்க வேண்டும்”  என  குறிப்பிட்டுள்ளார்.