அத்வானியை அவமானப் படுத்தும் நடவடிக்கை : சத்ருகன் சின்ஹா மோடிக்கு கண்டனம்

பாட்னா

பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி செய்து வருவதாக பாஜக மக்களவை உறுப்பினர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி மத்திய உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது 91 வயதாகும் அத்வானி பலமுறை பாஜக தலைவர் பதவியை வகித்துள்ளார். பாஜக ஆரம்பித்த பத்து வருடங்களுக்கு உள்ளாகவே இவர் அயோத்தி ராம் ஜென்ம பூமி இயக்கம் மூலம் கட்சியை தேசிய அளவில் பேசும்படி செய்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அத்வானி ஒரு அரசியல் குருவாக ஒரு காலத்தில் இருந்துள்ளார். கடந்த 2002 ஆம் வருடம் நடந்த குஜராத் கலவரத்தின் போது வாஜ்பாய் மோடியை குஜராத் முதல்வர் பதவியில் இருந்து நீக்க எண்ணினார். ஆனால் அத்வானி அதை தடுத்து மோடியை தொடர்ந்து முதல்வராக நீட்டிக்க பரிந்துரை செய்தார்.

அத்வானி கடந்த 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமைப்பாளர் முகமது அலி ஜின்னா ஒரு மதச் சார்பற்றவர் என கூறியதால் ஆர் எஸ் எஸ் அவர் மீது அதிருப்தி அடைந்தது.  அதில் இருந்து பாஜகவும் அத்வானியை ஓரம் கட்ட தொடங்கியது. அவர் பாராளுமன்ற விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் அவரை கண்டு கொள்வதில்லை என பலரும் கூறி வந்தனர். தற்போது அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த காந்திநகர் தொகுதியில் அவருக்கு பதிலாக அமித்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பாஜகவினருக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

இது குறித்து பாட்னா சாகிப் தொகுதியின் பாஜகவின் தற்போதைய மக்களவை உறுப்பினரான சத்ருகன் சின்ஹா தனது டிவிட்டரில், “அன்புள்ள ஐயா, நமக்கெல்லாம் ஒரு மரியாதைக்குரிய நண்பராக, அறிவுரையாளராக, வழிகாட்டியாக, தந்தை உருவில் உள்ளவரான ஒப்பில்லாத தலைவரான அத்வானியை அரசியல் மற்றும் தேர்தலில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளீர்கள். இது மிகவும் கவலைக்குறிய, மனதை புண்படுத்தும் அவமானகரமான நடவடிக்கை ஆகும்” என பதிந்துள்ளார்.

மற்றொரு பதிவில், “அத்வானிஜிக்கு மாற்றாக தற்போதுள்ள பாஜக தலைவர் உள்ளிட்ட வேறு யாராலும் இருக்க முடியாது. அவரால் அத்வானியின் அருகில் கூட நிற்க முடியாது. அத்வானியை ஓரம் கட்டும் நடவடிக்கைகள் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. இதை நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு தந்தையை போன்றவரை இவ்வாறு யாரும் அவமானப்படுத்த மட்டார்கள். நீங்களும் உங்களை சேர்ந்தோரும் எனக்கு செய்ததும் தாங்க முடியாததாகும். ஆனல் நான் உங்களுக்கு பதில் அளித்து மீண்டும் அதே இடத்துக்கு என்னால் வர முடியும்.

நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு எதிர் செய்கை உண்டாகும். உங்களுடைய ஒரு மனித நாடகத்துக்கும், இருவர் படைக்கும் மக்கள் பாடம் புகட்ட தயராக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

You may have missed