ராகுல் காந்திக்கு வாழ்த்துச் சொன்ன சர்ச்சைக்குரிய பா ஜ க முன்னாள் நடிகர்

பாட்னா

ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு முன்னாள் பாலிவுட் நடிகரும் பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரும் பாஜகவின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா  கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்.    சமீபத்தில் குஜராத் தேர்தலில்  பிரசாரம் செய்த மோடி மற்றும் அமித்ஷா விடம் அவர் ட்விட்டர் மூலம் கேட்ட கேள்வி மேலும் சர்ச்சையை உண்டாக்கியது.

“குஜராத் தேர்தலில் நாம் வெற்றி அடைந்தால் உங்களுக்கு முழுப் புகழும் கிடைக்கும்.  ஆனால் ஒருவேளை தோல்வியுற்றால் அதற்கு யார் பொறுப்பு?” என வினவி இருந்தார்.    அது மட்டுமின்றி ”தலைவர்கள் கைத்தட்டலுக்கு மட்டும் இல்லை, தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்” என மற்றொரு பதிவு இட்டிருந்தார்.    அதே போல குஜராத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முடிந்ததும் “ஒன் மேன் ஷா நடத்துவோரும், இருவர் கொண்ட படையும் டில்லிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.    நாங்கள் அனைவரும் தேவையற்ற தந்திரங்கள்,  தவறான தகவல்கள்,  பொய் வாக்குறுதிகளால் களைப்படைந்துள்ளோம்” என பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் பதவி ஏற்றதை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “பழம்பெரும் மற்றும் மரியாதைக்குரிய கட்சியின் தலைவராக வளர்ந்துள்ள ராகுல் காந்தியின் தினம் இது.    நாம் அனவரும் அவரை உண்மையான தேசிய எண்ணத்துடன் வாழ்த்துவோம்.   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”  என பதிந்துள்ளார்.