மோடியை கடுமையாக விமர்சித்த பாஜ எம்.பி.

சென்னை,

குஜராத்தில் 2வது கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.  இந்நிலை யில், காங்கிரசுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று மோடி பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், மோடியின் இந்த கருத்துக்கு அவரது கட்சியை சேர்ந்த எம்.பி.யான சத்ருகன் சின்ஹா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக  பரபரப்பு குற்றச்சாட்டை மோடி முன் வைத்தார். அதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

அதில், “குஜராத் தேர்தலில் எப்படியாவது வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்பதைவிட செயல்பாட்டில் வெற்றி பெறுவதுதான் இறுதியானது. அதற்காக புதுசு புதுசா அறிவிப்பை கொண்டுவர வேண்டுமா, தேர்தல் வெற்றிக்காக ஆதாரமற்ற மற்றும் நம்பமுடியாத கதைகளை ஒவ்வொரு நாளும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவிழ்த்துவிட வேண்டுமா என்ன?

இப்போது அவர்களை பாகிஸ்தான் தூதர் மற்றும் ஜெனரல்களுடன் ஏன் தொடர்பு படுத்த வேண்டும்?  இது வியக்கதக்கது. புதிய திருப்பங்கள், கதைகள் மற்றும் மூடிமறைப்பை தவிர்த்து நாம் கூறிய வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்தலை நேரடியாக எதிர்க்கொள்ள லாமே.

வீட்டுவசதி, வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் குஜராத் வளர்ச்சி மாடலை வைத்து பிரசாரம் மேற்கொள்ளலாமே. மதவாத அரசியலை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான அரசியல் மற்றும் தேர்தலுக்கு செல்லலாம்” 

இவ்வாறு சத்ருகன்சின்ஹா பதிவிட்டுள்ளார். இது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.