மும்பை

மோடியையும் அமித் ஷாவையும் பாஜகவில் இருந்து தற்போது காங்கிரசில் இணைந்துள்ள சத்ருகன் சின்ஹா கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

பாலிவுட் நாயகன் சத்ருகன் சின்ஹா பாஜகவில் இருந்து விலகி  தற்போது காங்கிரசில் இணைந்தார்.    இவர் தனது  பாட்னா சாகிப் தொகுதியில் நடைபெறும் மக்களவை தேர்தலில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை இவர் பாஜகவில் இருந்த போதிலிருந்தே கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சத்ருகன் சின்ஹா மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை இருவர் படை என குறிப்பிடுவது வழக்கமாகும்.வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் நடிகை ஊர்மிளா மடோன்கர் மற்றும் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் சஞ்சய் நிருபம் ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சத்ருகன் சின்ஹா பிரசாரம் செய்து வருகிறார்.

தேர்தல் பிரசார பேரணியில் சத்ருகன் சின்ஹா, “நாட்டின் பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம் இருவர் படை கடும் அழிவுக்கு கொண்டு சென்று விட்டது. ஆனால் எந்த ஒரு பாஜக தலைவரும் இவர்களின் கொடுங்கோல் தலமைக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. அதனால் இருவரும் யார் ஆலோசனையும் கேட்பதுமில்லை.

இவர்கள் இருவரும் இணைந்து செயல்படுத்திய பணமதிப்பிழப்பு பொருளாதாரத்துக்கு மரண அடியை அளித்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்குள் இந்த இருவர் படை ஜிஎஸ்டி யை அமுலாக்கியது. ஜி எஸ் டி அமுலாக்கத்தினால் சிறு வணிகர்கள் மிகவும் பாதிப்பு அடைந்தனர். இரு நிகழ்வுகளும் நாட்டில் கடுமையான வேலை இல்லா திண்டாட்டத்தை உருவாக்கி உள்ளன” என பேசி உள்ளார்