டில்லி

உச்சநீதிமன்றம் முத்தலாக் இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என கூறியதற்கு இந்த வழக்கை தொடுத்த ஷயரா பானு பாராட்டியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் 35 வயதான ஷயரா பானு என்னும் இஸ்லாமியப் பெண்.  இவரது கணவர் அலகாபாத்தில் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் ரிஸ்வான் அகமது.   இவர் கடந்த 2002ல் திருமணமானதில் இருந்தே வரதட்சணை கொடுமையால் அவதிப்பட்டுள்ளார்.  புகுந்த வீட்டு மனிதர்களின் வற்புறுத்தலால் ஆறு முறை கருச்சிதைவு செய்துக் கொண்டுள்ளார்.

இதற்கும் மேலாக 2015ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று இவருக்கு ஒரு கடிதத்தில் மூன்று முறை தலாக் என எழுதி இவருடைய கணவர் விவாகரத்து செய்து விட்டார்.  விவாகரத்துக்கு பின் ஷயாராவின் இரு குழந்தைகளையும் கணவர் அழைத்துச் சென்று விட்டார்.  இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான ஷயாரா மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுத் தேறினார்.   அந்த சிகிச்சைக்கு அவருடைய பெற்றோர்கள் உதவி செய்துள்ளனர்.

இந்த விவாகரத்து செல்லாது என அவர் உள்ளூர் இஸ்லாமியர்களிடம் முறையிட்டார்.  ஆனால் அவர்கள் செல்லும் என தீர்ப்பளித்தனர்.

இதனால் 2016ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முத்தலாக் முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஷயாரா வழக்கு தொடர்ந்தார்.  இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  தீர்ப்பில் முத்தலாக் முறை சட்ட விரோதமானது என்றும், இஸ்லாமிய நெறி முறைகளுக்கு புறம்பானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதற்கு ஷயாரா பானு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.  மேலும் இது இஸ்லாமியப் பெண்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.