ராணுவ அமைச்சகம் பற்றி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை: ப.சிதம்பரம் சாடல்
சென்னை:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறியவர், ராணுவ அமைச்ச கம் பற்றி அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார்.

எய்ம்ஸ் விவகாரத்தில் மத்தியஅரசின் மாற்றாந்தாய் போக்குக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றன. இந்த நிலையில் காரைகக்குடிக்கு வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக சாடினார்.
செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக நான் உள்ளேன். அதை உருவாக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டந்தோறும், செயல் வீரர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 20தேதி சிவகங்கை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டதில் தான் கலந்துகொள்ள இருப்பதாகவும், அங்கு தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய தனியாக வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து அவரிடம் ரஃபேல் போர் விமானம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ப.சி., இந்திய அரசிற்கு தேவையான 126 போர் விமானங்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது.
ஆனால் 36 ரபேல் விமானங்கள் வாங்க பா.ஜனதா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம், . கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை காட்டிலும் 9 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் விமானங்களை வாங்குவதாக பா.ஜனதா அறிவித்தது.
ஆனால்… எதற்காக விலை விலை குறைவு… அதனை தெரிவியுங்கள் என்று கேட்டால் தெரிவிக்க மறுக்கிறார்கள்.. குறைவான விலைக்கு விமானங்கள் வாங்குவது என்றால் அதிக விமானங்களை வாங்க வேண்டியதுதானே? ஏன் குறைத்து வாங்குகிறீர்கள்?.
ராணுவ அமைச்சகம் பற்றி அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை. பா.ஜனதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 3 பேர் ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டுள்ளனர். யாரும் உருப்படியான எந்த காரியத்தையும் செய்யவில்லை. இந்த அரசு அடக்கு முறை கொள்கையை கையாண்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
இந்திய ரூபாய் தொடர் சரிவு குறித்த கேள்விக்கு, இந்திய ரூபாய் சரிந்து வருவது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இதுபற்றி நான் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன் என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம். குற்றவாளிகள் நிற்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வரவேற்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற நிலை வந்தால் தற்போதைய பா.ஜனதா அரசு அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் குற்றத்தை சுமத்தி இருக்கும் என்றும் கூறினார்.

எய்ம்ஸ் அனுமதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சிதம்பரம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியவர், ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டு வாடாவை தேர்தல் கமிஷனால் தடுக்க முடியாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை தேர்தல் தான் தேவை என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதை கண்டித்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் கடிதம் மூலம் தமிழக அரசுக்கு தெரிவித்து.

அதன்படி மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு தமிழக சுகாதாரத்துறைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் எந்தவித நிதி ஒதுக்கீடும், கேபினட் அனுமதியும் வழங்கப்பட வில்லை என்பது தெரிய வந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.