மெட்ரோ ரெயில் அமைக்க முடியாத மோடியின் குஜராத் ஆட்சி : ஷீலா தீட்சித் தாக்கு

கமதாபாத்

மோடி 13 வருடங்களில் மெட்ரோ ரெயில் அமைக்க முடியாமல் ஆட்சி செலுத்தியதாக ஷீலா தீட்சித் கூறி உள்ளார்.

குஜராத் தேர்தலுக்கு பரப்புரை நிகழ்த்த காங்கிரஸ் தலைவர் பலர் ஈடுபட்டுள்ளனர்.   அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் டில்லி முதல்வருமான ஷீலா தீட்சித்தும் ஒருவர் ஆவார்.  அவர் நேற்று அகமதாபாத்தில் ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரை ஆற்றினார்.

ஷீலா தனது உரையில், “எனது ஆட்சிக் காலத்தில் நான் ஒரே வருடத்தில் டில்லி மெட்ரோவை அமைத்தேன்.   ஆனால் குஜராத்தில் 22 வருடங்களாகியும் மெட்ரோ ரெயில் அமைக்க முடியவில்லை.   இதில் 13 ஆண்டுகள் மோடி ஆட்சி செலுத்தி வந்துள்ளதை மறக்கக்கூடாது.    குஜராத் மாநிலத்துக்கு காங்கிரஸ் செய்துள்ள சாதனைகள் ஏராளம்.   இன்று அமுல் வெண்ணை மட்டும் பால் பொருட்கள் நாடெங்கும் புகழ் பெற்றுள்ளது.   அதை அமைத்தவர்கள் ஜவகர்லால் நேருவும், சர்தார் படேலும் தான்.  அப்போதைய அமைச்சர் வர்கிஸ் குரியன் இந்த தொழிற்சாலையை கேரளாவில் அமைக்க முயன்றார்.   அதைத் தடுத்து  குஜராத் மாநிலத்தில் இந்த தொழிற்சாஅலையை அமைத்தவர் நேருதான்.

அதுமட்டுமின்றி அகமதாபாத்தில் புகழ்பெற்ற மேனேஜ்மெண்ட் படிப்பு நிறுவனம் ஐஐஎம்,  இந்திய வான்வெளி ஆராய்ச்சி கழகம், தேசிய உடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், போல பலவற்றையும் குஜராத்தில் அமைத்தது காங்கிரஸ் தான்.   எந்த ஒரு பெரிய கல்வி நிறுவனம் என குஜராத்தில் சொன்னாலும் அது காங்கிரஸ் அமைத்ததாக மடுமே இருக்க்கும்.   இது போல மாநில மக்களுக்கு பல நன்மைகளை செய்த காங்கிரஸை மக்கள் தற்போது தேர்ந்தெடுப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது.   மாறுதலை விரும்பும் குஜராத் மக்கள் பாஜகவுக்கு இனி வாக்களிக்க மாட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.