ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை: வருமானவரித்துறை கடிதம்

சென்னை,

தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோர் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளதால், அதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளது.

தொழில் அதிபர் சேகர் ரெட்டிதொழில் அதிபரான இவர் தமிழகத்தில் மணல் குவாரிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தார். இது தவிர பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். இதன் மூலம் அவர் பல கோடிக்கு பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத்தொடர்ந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது.

வருமான வரி சோதனைஇந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கோடிக்கணக்கில் பல தொழில் அதிபர்களிடம் பரிமாற்றம் நடந்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சேகர் ரெட்டி வீட்டில் கடந்த வருடம் டிசம்பர் 8–ந் தேதி சோதனை நடந்தது.

வருமான வரித்துறையின் சோதனை முடிவில் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.147 கோடி பழைய ரூபாய் (செல்லாது என்று அறிவிக்கப்பட்ட) நோட்டுகள், ரூ.34 கோடிக்கு புதிய ரூ2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் 178 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் டைரி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

முன்னாள் தலைமை செயலாளர்சேகர் ரெட்டியிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், அவருடைய மகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சேரதனை நடத்தினார்கள்.

மேலும் சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள தகவலின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சரின் உதவியாளர் உள்பட 4 பேரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அமலாக்கபிரிவினர் நடவடிக்கைசேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 34 கோடியாகும். இந்த பணத்திற்கு சேகர் ரெட்டி தரப்பில் இருந்து ஆதாரம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அந்த பணத்தை கடந்த 5–ந் தேதி அமலாக்கபிரிவினர் முடக்கிவைத்துள்ளனர்.

இந்த நிலையில் வருமான வரித்துறை கைப்பற்றிய சேகர் ரெட்டியின் டைரியில் ஒப்பந்தம் பெறுவதற்காக தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு பணம் கொடுத்ததற்கான முக்கிய விவரம் உள்ளது.

கடிதம்இதையொட்டி வருமான வரித்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில், ‘‘சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் அரசு துறைகளை சேர்ந்த பல ஒப்பந்தங்களை பெறுவதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு ரூ.300 கோடி பணம் கொடுக்கப்பட்ட விவரம் உள்ளது. எனவே லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.