நடராஜனுக்கு ஒருநாள் அணியில் இடம் – ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் பகிரும் சேவாக்!

புதுடெல்லி: தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு, இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது தனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அளித்ததாக கூறியுள்ளார் முன்னாள் இந்திய அதிரடி வீரர் சேவாக்.

கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணி பயிற்சியாளராக இருந்த சேவாக், நடராஜனை ரூ.3 கோடிக்கு வாங்கினார். இது அப்போது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது பேசியுள்ள சேவாக், டிஎன்பிஎல் தவிர, வேறு முதல்தரப் போட்டிகளில் ஆடியிராத நடராஜனுக்கு எதற்காக இவ்வளவு தொகை? என என்னிடம் பலர் கேட்டனர். ஆனால், அவரின் பந்துவீச்சு வீடியோக்களைப் பார்த்தப் பிறகு, பணத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

ஆனால், திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக, அவரால் ஒரு போட்டிக்கு மேல் விளையாட முடியாமல் போனது. நடராஜுக்கு இந்திய டி-20 அணியில்தான் இடம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒருநாள் போட்டியில் இடம் கிடைத்தது ஆச்சர்யம் & மகிழ்ச்சி.

அவர், இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, தனது இடத்தை தக்க வைக்க, எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளர் சேவாக்.