குடியுரிமை சட்ட மசோதாவில் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்க்கவும்: மத்திய அரசுக்கு ஷியா வஃக்பு வாரிய தலைவர் கோரிக்கை

--

மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவின்படி குடியுரிமை பெறுபவர்கள் பட்டியலில் ஷியா முஸ்லிம் பிரிவினரையும் சேர்க்கவேண்டும் என உத்திர பிரதேச ஷியா வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம் ரிஜ்வீ மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. அதிமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு 311 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற இம்மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனாலும், இம்மசோதாவில் இஸ்லாமியர்களை தவிற்த்து, இந்து, ஜெயின், சீக்கியர், கிறித்தவர், பார்சி மதத்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கும் படி ஷரத்துக்கள் உள்ளதால், நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக வசீம் ரிஜ்வீ தனது கடிதத்தில், “இந்து, சீக்கியர், ஜெயின், கிறித்தவர் மற்றும் பார்சியை போல் முஸ்லிம்களின் ஷியா பிரிவினரும் பாகிஸ்தான், பங்காளாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஷியாக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவன்றி, சவூதி அரேபியா, சிரியா போன்ற முஸ்லிம் நாடுகளிலும் ஷியாக்களும் தம் மதப்பிரிவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த 1,400 ஆண்டுகளாக பெரும்பாலான முஸ்லிம்களின் சன்னி பிரிவினர் நமது ஷியாக்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

எனவே, இந்தியாவின் சிறுபான்மையினரான முஸ்லிம்களில் நாம் சிறுபான்மையினராக இருக்கிறோம். எனவே, வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருவோருக்கு கிடைக்கும் குடியுரிமை பட்டியலில் ஷியாக்களையும் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.