சாத்தான்குளம் விவகாரம் – குரலெழுப்பிய ஷிகர் தவாண்!

புதுடெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் இறந்த விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ் & அவரின் மகன் இருவரும், கடை திறப்பு நேரம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சிறையில் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிய புயலைக் கிளப்பி வருகிறது. இணையதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.

அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தைப் பற்றி அறிந்து நான் கலங்கிவிட்டேன். நாமெல்லாம் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்றுள்ளார்.