புதுடெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வர்ணனையாளராக பணியாற்ற தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான்.
அவர் கூறியதாவது, “கிரிக்கெட்டிற்கு பிறகான எனது வாழ்வை வர்ணனையாளராக செலவிட விரும்புகிறேன். எனக்கு இந்தி மொழி நன்றாக பேச வரும். எனவே, இந்தி வர்ணனையாளராக வேண்டுமென்பது விருப்பம்.
எனக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வும் உண்டு. அதை வர்ணனையின்போது பயன்படுத்துவேன். இந்தப் பணியை நான் முழு ஈடுபாட்டுடன் நன்றாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
எனக்கு புல்லாங்குழல் என்றால் மிகவும் பிடிக்கும். சாலையில் யாரேனும் வாசித்தால்கூட, நின்று கேட்டுச் செல்வேன். எனது வர்ணனையாளர் பணியில் புல்லாங்குழலும் என்னுடன் இருக்கும். புல்லாங்குழல் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக ஆன்லைன் பயிற்சிகளையும் எடுத்து வருகிறேன்” என்றார்.
இவர், இதுவரை தான் ஆடிய மூன்றுவகை கிரிக்கெட்டிலும் சேர்த்து, மொத்தமாக 9591 ரன்களை அடித்துள்ளார். ஆனால், அடிக்கடி காயமடைவதுதான் இவரின் பலவீனம். சில போட்டிகள் நன்றாக ஆடினால் போதும், அடுத்து உடனே காயமடைந்து விடுவார்.