கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில், அவரைத் தவிர அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஷில்பா ஷெட்டி, ’’கடந்த 10 நாட்கள் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் கடினமானதாக இருந்தன. என் மாமனார், மாமியார் இருவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதியானது. தொடர்ந்து சமிஷா, வியான் ராஜ், என் அம்மா, கடைசியாக ராஜ் என அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகாரபூர்வ வழிமுறையின் படி அனைவரும் வீட்டுத் தனிமையில், அவரவர் அறையில் உள்ளனர். மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி வருகிறோம். வீட்டுப் பணியாளர்கள் இருவருக்கும் கூட தொற்று உறுதியானது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடவுளின் அருளால், அனைவரும் தேறி வருகின்றனர்.

எனக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. விதிகளின் படி அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உடனடி உதவி செய்த மும்பை மாநகராட்சி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நன்றி.

உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள். தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள், கிருமி நாசினி பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக இருங்கள். கோவிட் தொற்று இருக்கிறதோ, இல்லையோ நீங்கள் மனரீதியில் நேர்மறைச் சிந்தனையோடு இருங்கள்’’ என்று பகிர்ந்துள்ளார்.