சீயோல்:

பிரார்த்தனையால் கொரோனாவை குணமாக்குவேன் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தென்கொரிய கிறிஸ்தவ மத தலைவர்மீது, அந்நாட்டு கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

‘கொரோனா’ குணமாக்க பிரார்த்தனை

சீனாவை ஆட்கொண்ட கொரோனா, தற்போது உலகநாடுகளையும் பயமுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவை முற்றுகையிட்டுள்ள கொரோனா வைரஸ், 26 பேரை பலிவாங்கி உள்ள நிலையில், 4212 பேர் நோய் தாக்குதலால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் ஷிஞ்சியோன்ஜி பகுதியில் உள்ள தேவாலயத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதித்த பெண் ஒருவர், நோய் குணமாகும் என்ற எதிர்பார்ப்பில், அந்த கோவிலின் பாதிரியார் ஆலோசனைப்படி, பிரார்த்தனைக்காக அடிக்கடி தேவாலயத்துக்கு வந்து, மற்றவர்களுக்கும் நோயை பரப்பிவிட்டுள்ளார்.

பிரார்த்தனை நடத்தப்பட்ட சர்ச்சில் கொரோனா சோதனை

சுமார்  2.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அந்த தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் லீ மான்-ஹீ சிறப்பு, கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட சிறப்பு பிரார்த்தனை நடத்தப்போவதாக  அழைப்பு விடுத்து, பிரார்த்தனை நடத்தி உள்ளார். இந்த  பிரார்த்தனையின் போது, கொரோனா பாதித்த பெண்ணும் கலந்துகொண்ட நிலையில்,  அன்று பிரார்த்தனையில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிரியார் லீ மான்-ஹீ மீது காவல்துறையினர் கொலைவழக்கு பதிவு செய்துள்ள நிலையில், பிரார்த்தனையில் கலந்துகொண்ட பொதுமக்களை சுகாதாரத்துறையினர் தேடிச்சென்று, ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேர் மீது, கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும், தொற்று நோய் மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.