விண்கலங்களை கண்காணிக்க  கப்பல் ஏவுகணை முனையம்! இஸ்ரோ

--

பெங்களூரு.

விண்வெளிக்கலங்களை விண்ணில் ஏவ வசதியாக கப்பலில் ஏவுதள முனையம் அமைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் விண்கலங்கள், ஏவுகணைகளை இஸ்ரோ தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகிறது.

இதன் அடுத்தக்கட்டமாக கடலில் இருந்து விண்கலங்களை ஏவ வசதியாக கப்பலில் அதற்கான ஏவுதளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதன் முன்னோட்டமாக சமீபத்தில் கப்பல் ஒன்றில் ஏவுகணைகளை கண்காணிக்கும் முனையம் அமைத்து செயல்படுத்தப்பட்டது.

இதன்மூலம் விண்ணில் செலுத்தப்படும் விண்கலங்களை சரியான பாதைக்கு திருப்பவும், விண்ணில் குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தவும் ஏதுவாக கப்பலில் இந்த தளத்தை உருவாக்கி வருகிறது.

இந்த கப்பல் முனையத்தில்  அமைக்கப்பட்டு உள்ள ஆண்டெனா முப்பரிமாணத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகள் மூலம், விண்ணில் செலுத்தப்படும் விண்கலங்கள் சரியாக பாதையில் செல்கின்றனவா என்பதை கண்டறிய முடியும் என்றும், தவறும் பட்சத்தில் அதை சரியான பாதைக்கு திருப்ப செய்யும் வகையில் கருவிகள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் வெள்ளோட்டம் சமீபத்தில் நடுக்கடலில் நடைபெற்றது. இந்த ஏவுகணை தள ஆண்டெனா டெர்மினல்,  சாகர் மஞ்சுஷா என்னும் கப்பலில் பொருத்தப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓசன் டெக்னாலஜி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பல் தற்காலிக வாடகைக்கு எடுக்கப்பட்டு சோதனை நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

வங்காள விரிகுடா கடலில் இந்த கப்பல் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு PSLV-C38 விண்கலம் இதன் மூலம் சரியான பாதைக்கு வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டது.